வெறுப்பு அரசியல் மிகுந்த கவலையளிக்கிறது! சகோதரத்துவம் வளர வேண்டும்! தமிமுன் அன்சாரி வேதனை!
சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக வெறுப்பு அரசியல் முன்னிறுத்தப்படுவதாகவும் இது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தீய சக்திகளை நிராகரித்து தமிழக மண்ணுக்கே உரிய சகோதரத்துவத்தை தமிழக மக்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக 3 தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

அமைதிப்பூங்கா
அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒரு தாய் மக்கள் போல வாழ்வது இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இந்நிலையில் சமீப காலமாக சில தீய சக்திகள் பொது ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதை இக் கூட்டம் கவலை அளிக்கிறது. தமிழக மக்கள் இத்தகைய சக்திகளை நிராகரித்து தமிழக மண்ணுக்கே உரிய சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்க பாடுபட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தமிழக சிறைகள்
தமிழக சிறைகளில் உள்ள 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய தமிழக அரசை மீண்டும் வலியுறுத்துகிறது. அதே வேளையில், முதல் கட்டமாக இவர்கள் அனைவருக்கும் நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என்றும் இக் கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் ( TNPSC ) ஆன்லைன் தேர்வு விண்ணப்பத்தில் மதம் என்கிற தலைப்பில், முஸ்லிம்களுக்கு மட்டும் பிறப்பிலேயே முஸ்லிமா? மதம் மாறியவரா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இக்கேள்வி அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்பதால் இக்கேள்வி பகுதியை நீக்குமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கட்சி வளர்ச்சி
இதேபோல் மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக பொதுக்குழுக்களை நடத்துவது என்றும், தலைமை நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பது என்றும் அந்த கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications