திமுக கூட்டணியை உடைக்க சதி... மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னை: திமுக கூட்டணியை உடைக்க சபலத்துடன் சில சக்திகள் களம் இறங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியை பற்றி பேசி சலசலப்பை ஏற்படுத்த சிலர் எத்தனிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திமுக கூட்டணி
தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக் கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. ஊசிமுனைக் காதளவு துளையேனும் போட்டு, கழகக் கூட்டணியின் கட்டமைப்பை அசைக்க முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

விவாதமே அல்ல
200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல!

பொழுதுபோக்கு
தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அதிகாரபூர்வமாக முடிவெடுத்து அறிவிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, 200 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடப் போகிறது என்ற அனுமானமும், அது தொடர்பான விவாதங்களும், தேவை அற்றவை மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டவையும் ஆகும் என்று தமிழக மக்கள் அறிவார்கள். கழகக் கூட்டணியை மட்டும் குறி வைத்தே செய்திகள் வெளியிடப்படுவதும், விவாதங்களைக் கட்டமைப்பதும், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தகைய விவாதங்கள் பொழுதுபோக்கவே பயன்படும்.

சலசலப்பு
அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில், எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள். கழகக் கூட்டணியை அந்தச் சக்திகளால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.












Click it and Unblock the Notifications