"தீ பரவட்டும்”.. தமிழ்நாடு கேரளா சேர்ந்தால்.. ஆளுநருக்கு செக்! பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்போல் தங்கள் மாநிலங்களில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்த கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.
மாநில அரசுகளால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10 ஆம் தேதி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 'ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது சம்பந்தமாக 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் தனது கடித்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.
நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன். தங்களின் மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் உறுதியாக நம்புகிறேன்." என தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்பதாக முதல் ஆளாக அறிவித்தார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். இதற்கிடையே தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இதற்கு ஆதரவளிப்பதாக கூறி உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து உள்ள மு.க.ஸ்டாலின், "எனது கடிதத்திற்கு முழு ஆதரவு அளித்ததற்கு நன்றி. மாநில சுயாட்சியை அழிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக ஒரு அரணாக தமிழ்நாடும் கேரளாவும் நிற்கின்றன. ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான நமது அறப்போராட்டத்திலும் வெற்றி பெறுவோம்." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications