இங்கே பணம் கொட்டுது.. மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. 1 லட்சம் வரை கிடைக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை சம்பாதிப்பதே கடினம் என்கிற நிலை உள்ளது. ஆனால் மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர், தான் மாதம் சுமார் 75,000 ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறியது இணையத்தில் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சரான உட்கர்ஷ் வர்மா என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், அந்த ஓட்டுநர் தனது வருமானத்தைப் பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ரேபிட்டோ பைக் டாக்ஸி பிரச்சனை இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஓரளவு வருமானம் ஈட்டுகிறார்கள்.. மாதம் 30 ஆயிரம் முதல் 45000 வரை வருமானம் ஈட்ட முடியும் என்கிற நிலை உள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் ஓட்டுநர்கள் தேவை அதிகரித்துள்ளது.

பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ₹25,000 முதல் ₹35,000 வரை சம்பளம் வழங்கத் தயாராக உள்ளன. ஒரு நாளில் 10 முதல் 12 மணிநேரம் ஓட்டும் ஒரு ஓட்டுநரின் வருமானம் சென்னை போன்ற நகரில் 2500 வரை இருக்கும்... செலவு போக தினமும் 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க முடியும். ஒட்டுமொத்தமாக 25000 முதல் 45000 வரை வருமானம் ஈட்ட முடியும் என்கிற நிலை உள்ளது.
தினமும் 2500 வருமானம்
சென்னையில் இப்படி என்றால், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர், தான் மாதம் சுமார் 75,000 ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறி உள்ளார். அனைத்து செலவுகளும் போக, ஒரு நாளைக்கு சராசரியாக ₹2,500 சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார். இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சரான உட்கர்ஷ் வர்மா என்பவர் பகிர்ந்த வீடியோவில் இந்த தகவல்கள் இருக்கிறது. இதைக் கணக்கிட்டுப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், தங்களது வேலை மற்றும் வருமானம் குறித்து மறுபரிசீலனை செய்து ஆட்டோ ஓட்டலாமா என்று மும்பையில் யோசிக்கிறார்கள்.
மும்பையின் வாழ்க்கைச் செலவு அதிகம் என்பது பற்றி இன்ஸ்டா இன்புளுயன்சர் வர்மா பேசத் தொடங்கியபோது, அந்த ஆட்டோ ஓட்டுநர் சாதுர்யமாகப் பதிலளித்தார். மும்பை செலவுமிக்க நகரம் தான், ஆனால் அதே சமயம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்த இடமும் கூட என்றார். "இங்கே பணம் மழையாக கொட்டுகிறது" என்று கூறிய அவர், தேடத் தெரிந்தவர்களுக்கு மும்பையில் பணம் கொட்டும் என்று குறிப்பிட்டார்.
குறைந்தபட்சம் ₹60,000
இன்ஸ்டா இன்புளுயன்சர் வர்மா தனது பி.டெக் படிப்பிற்குப் பிறகு சேர்ந்த முதல் நிறுவனத்தில் கூட இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை என்று ஆதங்கப்பட்டார். அந்த ஓட்டுநரோ, "சராசரியாக ₹75,000 கிடைக்கும். கொஞ்சம் கடினமாக உழைத்தால் ₹1 லட்சம் வரை கூட சம்பாதிக்கலாம். மிகக்குறைந்தபட்சம் ₹60,000 உறுதியாகக் கிடைக்கும்" என்றார்.
வர்மா தனது பதிவில், ஒரு அலுவலக அறைக்குள் முடங்கிக் கிடப்பதை விட, ஆட்டோ ஓட்டுவது சிறந்த நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவில் ₹30,000 சம்பள வேலை மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது, ஆனால் ₹75,000 சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அவ்வாறு கருதப்படுவதில்லை. இது வெற்றியின் விசித்திரமான வரையறை" என்று பதிவிட்டிருக்கிறார்.
சமூக வலைதள எதிர்வினைகள்
இந்த வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்குப் பயனர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த ₹75,000 வருமானத்திற்காக அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சலுகைகளைத் தியாகம் செய்கிறார்கள்" என்று ஒரு நெட்டிசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உழைப்பும் சவால்களும்
"ஒரு ஆட்டோ ஓட்டுநர் சில மாதங்களில் அதிகமாகச் சம்பாதிக்கலாம். ஆனால் அவர் நாள் முழுவதும் வெயில், போக்குவரத்து நெரிசல் மற்றும் நிச்சயமற்ற சூழலில் தெருவிலேயே இருக்க வேண்டும். ₹20-30 ஆயிரம் சம்பள வேலை என்பது ஒரு நிலையான சூழலையும், சௌகரியத்தையும் தரும். பணம் மட்டுமே முழு வாழ்க்கையும் அல்ல" என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications