எரிகிற வீட்டில் பறிப்பதற்குப் பெயர் வணிகம் அல்ல கொள்ளை.. எம்பி சு வெங்கடேசன் கடும் விமர்சனம்
சென்னை: உக்ரைன் போரால் தனியார் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் உச்சத்திற்கு சென்றுள்ளது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில்:
உக்ரைன்: உச்சத்திற்கு கட்டணம் உயர்த்திய தனியார் விமானங்கள்
கடிவாளம் இல்லை என அமைச்சர் கைவிரிப்பு
சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்.

ரஷ்யா தாக்குதல்
உக்ரைனில் ரஷ்யா இராணுவத் தாக்குதல் தொடுத்ததையொட்டி அங்கு சிக்கித் தவித்த மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர விமானக் கட்டணத்தை ஐந்து மடங்கு தனியார் விமான நிறுவனங்கள் உயர்த்தியது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி (எண் 235/17.03.2022) எழுப்பி இருந்தேன். இது போன்ற நெருக்கடி காலங்களில் அவர்கள் மக்களிடம் இருந்து சூறையாடுவதை கட்டுப்படுத்த இயலுமா? அதைத் தடுக்க ஏதாவது கட்டுப்பாடு எதிர்காலத்தில் கொண்டு வரப்படுமா? என்பதே என் கேள்வி.

போக்குவரத்து துறை அமைச்சர்
அதற்கு பதில் அளித்துள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, அரசு எவ்வாறு ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவெகியா ஆகிய உக்ரைன் அண்டை நாடுகள் வாயிலாக மாணவர்களை இந்தியாவிற்கு திரும்ப வரச் செய்தது என்பதையும், அரசே அவர்களுக்கு உரிய விமானக் கட்டணங்களை செலுத்தி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசு கட்டணங்களை ஏற்கிற முடிவை எடுப்பதற்கு முன்பாக ஏர் இந்தியா பயணிகளிடம் கட்டணம் வசூலித்து கொண்டு அழைத்து வந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

விமான கழக சட்டம்
விமானக் கழக சட்டம் மார்ச் 1994 இல் ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டணங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் அது தொடர்பான எல்லா அம்சங்களையும் - அதாவது விமானம் ஓடுவதற்கான செலவு, சேவையின் தன்மை, உரிய லாபம், பொதுவாக நடைமுறையில் உள்ள கட்டணம் ஆகியன உள்ளிட்டவற்றை - கணக்கில் கொண்டு நியாயமான கட்டணத்தை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், அவர்களின் செயல்பாட்டிலோ, வணிக முடிவுகளிலோ அரசு தலையிடுவதில்லை எனத் தெரிவித்தார்.

காட்டு நீதி
இந்த பதில் தெரிவித்திருப்பது என்ன?
நாங்க கயிறை அவிழ்த்து விட்டோம். அவர்களாக நியாயமாக நடக்க வேண்டும். இனி கடித்தாலும் குதறினாலும் நாங்கள் தலையிட மாட்டோம். அவர்கள் பாடு, மக்கள் பாடு. இதுதான் சந்தையின் நியதி. வலுத்தவை வாழும் என்ற காட்டு நீதி என்ற செய்தியைத்தான் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா டாடா
ஏர் இந்தியா டாடாவின் கைகளுக்கு போகும் போதே சொன்னோம். பொதுத் துறைகள் அவசியம் வேண்டும் என்று... இவ்வளவு சீக்கிரம் தனியார்கள் குரூரம் வெளிப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
குறைந்த பட்சம் தனியார் மீது சமூக பொறுப்புக்கான கட்டுப்பாடாவது விதிக்க வேண்டும். திருடர்கள் கைகளிலேயே சாவியை கொடுப்பது போல் அவர்களாகவே நியாயமாக நடப்பார்கள் என்றால் அரசின் பாத்திரம்தான் என்ன?
இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரிலும் சு வெங்கடேசன் கண்டனம்
அது போல் அவரது ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்து சு வெங்கடேசன் பதிவு போட்டுள்ளார். அதில் உக்ரைன்: உச்சத்திற்கு கட்டணம் உயர்த்திய தனியார் விமானங்கள்.
கடிவாளம் இல்லை என
அமைச்சர் கைவிரிப்பு
ஏர் இந்தியா கைவிட்டு போனதன் விளைவு.
பொதுத் துறைகளை தனியார் மயம் ஆக்கும் ஒன்றிய அரசு இப்பவாவது யோசிக்க வேண்டாமா?
எரிகிற வீட்டில் பறிப்பதற்குப் பெயர் வணிகம் அல்ல கொள்ளை. #Ukraine என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications