தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம்.. சிவதாஸ் மீனா மாற்றம்
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 50ஆவது தலைமைச் செயலாளர் ஆவார். ஏற்கெனவே தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முருகானந்தம் நிதித் துறை செயலாளராகவும் இருந்தவர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் சிவதாஸ் மீனா.

ராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனா, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் நேற்று நிகழ்ந்தது. இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. நேற்றைய தினம் தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுனில் குமார் நியமிக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலாளர் மாற்றப்படுவார் என்ற பேச்சு இருந்தது.
சிவதாஸ் மீனா: இறையன்பு ஓய்வு பெற்றதும் சிவதாஸ் மீனாவை கேட்டு வாங்கிய முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலாளராக நியமித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் ஓராண்டு கழித்து இது போல் தலைமைச் செயலாளரை மாற்றுவதற்கான தேவை ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதாவது சிவதாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெறுகிறாராம்.
ரேரா தலைவர் : இதனால் அவரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்தால் , அவர் பணி ஓய்வு பெற்றாலும் கூட அந்த பதவியில் நீடிக்க வாய்ப்பிருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றத்தை செய்தார் என தெரிகிறது. அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வியின் போது ஸ்டாலினின் குட் வில் புக்கில் இருந்த முருகானந்தம் என பலருக்கும் தெரிந்தது.
முதல் பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதித் துறை செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவர் 1991 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் ஐஎம்எம்மில் எம்பிஏ படித்தவர்.
யார் இந்த முருகானந்தம்: அதிமுக ஆட்சியில் தொழில்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்தார். திமுக ஆட்சி அமைந்தவுடன் முருகானந்தம் ஐஏஎஸ் நிதித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதித் துறையில் அதிகம் அனுபவம் வாய்ந்தவர்களைத்தான் நியமிப்பார்கள். ஆனால் அந்த துறையில் அனுபவம் இல்லாத முருகானந்தத்தை முதல்வர் ஸ்டாலின் நியமித்தது அவர் மீதான நம்பிக்கையை காட்டியது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: அந்த நம்பிக்கைக்கேற்ப முருகானந்தமும் சிறப்பாக செயல்பட்டு அப்போது நிதித் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பாராட்டை பெற்றார். முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் முதல்வரின் தனிச் செயலாளராக 4 பேரை நியமித்தார். அதில் ஒருவர் உதயசந்திரன் ஐஏஎஸ். அவர் நிதித் துறைச் செயலாளராக கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இதையடுத்து முதல்வரின் தனிச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். தற்போது அவரே தமிழக தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் உள்துறை செயலாளராக இருந்த பி.அமுதா , வருவாய் துறைக்கு மாற்றப்பட்டார். அது போல் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications