’என்கவுண்டர்’ வெடித்த துப்பாக்கி..துடித்து அடங்கிய திருவேங்கடம்! திமுக அரசின் நாடகம்..சீமான் கண்டனம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம்
காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருவேங்கடத்திடம் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடத்தை அழைத்துச் சென்றுள்ளனர். ஆயுதங்களை திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக கூறிய நிலையில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு திருவேங்கடம் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் என்கவுண்டர் நடந்த இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதற்கிடையே திருவேங்கடத்தின் என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை என அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய சுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது.
வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது. உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரண்டைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.
தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு
உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணைக்கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications