3வது பெரிய கட்சி.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் போட்டி? நாம் தமிழர் பிளான் இதுதான்!
சென்னை: கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் தான் பிப்ரவரி 27 ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் சார்பில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதன் உண்மை நிலை என்ன என்பது பற்றியும், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார்? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 2021ல் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல்
இந்நிலையில் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக போட்டியிடும் என கூறப்பட்டது. ஆனால் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி
இதேபோல் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளனர். பாமக இடைத்தேர்தலில் இருந்து விலகிய நிலையில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் சீமானும் போட்டியிடலாம் என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி டிடிவி தினகரனிடம் கேட்டபோது, ‛‛நான் போட்டியிடுவதற்கும் வாய்ப்புள்ளது'' என கூறினார். இருப்பினும் இறுதி முடிவு என்பது ஜனவரி 27 ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

சீமான் பிளான்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டுவருகிறார். அதன்படி சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளித்தார். இதுபற்றி சீமான் கூறியதாவது:

ஜனவரி 29 ல் வேட்பாளர் அறிமுகம்
முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு இன்று நடந்தது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுடனும், வரும் 25ம் தேதி புதுக்கோட்டையில் அதனை சுற்றியுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களையும், ஜனவரி 26ல் மதுரையிலும் கலந்தாய்வு செய்ய நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு ஜனவரி 29 ல் ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம் நடைபெறும். பிறகு தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.

சீமான் போட்டியா?
இதையடுத்து பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைதேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, அங்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிடுவோம், அதனால் திமுகவே வெல்லும் என்பது போன்ற விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. எங்களின் நோக்கம் வெல்வது ஒன்றுதான். எங்கள் இலக்கை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கின்றோமே தவிர பிறர் கூறும் விமர்சனங்களை எல்லாம் நாங்கள் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. பிற கட்சிகள் எத்தனைக் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், எங்களுக்கு அதைப் பற்றி எந்த பயமும், கவலையும் இல்லை, நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்." என்றார்.

ஜனநாயக புரட்சி
மேலும், திமுக, அதிமுக பிற கட்சிகளை தங்களோடு சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து, பல கோடிகளைச் செலவழித்து தேர்தலை எதிர்கொள்ளும். ஓட்டுக்கு காசு கொடுத்து மக்களின் வாக்கைப் பறிக்கும். எங்களிடத்தில் கோடிகள் இல்லை, ஆனால் உயர்ந்த கொள்கைகள் இருக்கிறது. அதனைக் கொண்டு நாங்கள் வாக்கு சேகரிப்போம். அதற்கு கடுமையாக உழைப்போம். அதை களத்தில் நீங்களே பார்ப்பீர்கள். பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தைக் காப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதை நாங்கள் செய்வோம்" என்றார்

சோம்பலும், ஓய்வும் தற்கொலைக்கு சமம்
அதோடு "நாங்கள் எந்த பின்புலமும் இல்லாத எளிய பிள்ளைகள். பணபலமும் இல்லை, ஊடகத்தின் ஆதரவும் பெரிதாக இல்லை. இந்த நிலையில் தனித்துப் போட்டியிட்டு, வாக்கிற்குக் காசு கொடுக்காமல் மக்களின் நன்மதிப்பைப் பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக வந்ததே பெரிய சாதனை தான். நாங்கள் இன அழிப்பிலிருந்து பிறந்தப் பிள்ளைகள். அதனால் தேர்தல் தோல்விகளுக்கெல்லாம் நாங்கள் துவண்டு போகமாட்டோம். அது எங்களின் தோல்வியல்ல, எம் மக்களின் தோல்வி தான். ஒவ்வொரு நாளும் எனக்கு மனுக்கள் வருகிறது, போராட்டத்திற்கு அழைப்பு வருகிறது. பல போராட்டங்களைச் செய்துள்ளோம். இதுவரை எத்தனைப் போராட்டக் கோரிக்கைகள் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தது எங்களின் தோல்வியல்ல மாறாக எம் மக்களின் தோல்வி தான். ஐயா பெரியார் கூறியது போல, அரசியலில் சோம்பலும், ஓய்வும் தற்கொலைக்குச் சமம். அதனால் நாங்கள் அயராது உழைப்போம்" என்றார்.

3வது கட்சியாக நாம் தமிழர்
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுக்கள் பெற்று 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். இவரை தொடர்ந்து கூட்டணி ஏதும் இன்றி தனித்து போட்டியிட் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11,269 ஓட்டுக்கள் பெற்று 3ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications