Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லகண்ணுவின் நிழல் கூட ஒழுக்கமானது.. அபூர்வமான தலைவர் நல்லகண்ணு.. மாறாத பொதுநலம் கொண்ட அதிசய தோழர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேர்மை, தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் போன்றவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. தன்னுடைய எளிமையாலும், சீரிய ஒழுக்கத்தாலும், அனைவராலும் நேசிக்கப்படுபவர் மூத்த தலைவர் நல்லகண்ணு... எதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் இவராகத்தான் இருக்க வேண்டும். அரசியலுக்கும் அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பக்கூடிய தலைவரும்கூட..!!

100 வருடங்களுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் மூத்த தலைவர் நல்லகண்ணு. இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்பட்டது...

R Nallakannu Communist Leader nallakannu

இளமையிலேயே போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் கேசிஎஸ் பள்ளியில் படித்தபோது, ஆங்கிலேயருக்கு எதிராக நாடகம் நடத்தியதால் பள்ளியை விட்டே நீக்கப்பட்டார். பிறகு வேறு பள்ளியில் படித்து நெல்லை இந்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால், அங்கிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது நல்லகண்ணுக்கு வயது 22.

அசைவ உணவு

நல்லகண்ணுவின் அப்பா பெயர் ராமசாமி. அவர் ஒரு தீவிரமான வைணவ பக்தர் என்பதால் அசைவம் சாப்பிடுவதில்லை.. அதனால் நல்லகண்ணுவும் அசைவம் சாப்பிடாமலேயே பள்ளி, கல்லூரிகளில் வளர்ந்திருக்கிறார்.

ஆனால் இயக்க ரீதியான போராட்டங்களின்போது, தலைமறைவு வாழ்வு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1948, 49ம் வருடங்களில், ஆங்காங்கே உள்ள வீடுகளில் பதுங்கி, மறைந்து வாழும் சூழ்நிலை வந்தது. அப்போது அந்த வீட்டிலுள்ளவர்கள் யார் என்ன தந்தாலும் அதை வாங்கி சாப்பிட்டார்.. அப்படிதான் அசைவமும் அவருக்கு பல சமயம் உணவாக வந்து சேர்ந்தது.

2000 நெல் மூட்டைகள்

1943ல் நல்லகண்ணு எழுதிய கட்டுரை சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.. இந்த கட்டுரையால் பல மாற்றங்களை நிகழ்த்தி காட்டினார் நல்லகண்ணு.,

அப்போது ஜனசக்தி என்ற கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்தார் நல்லகண்ணு.. நெல்லையில் நில பண்ணையார்கள் 2000 நெல்மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக நல்லகண்ணு காதுகளுக்கு எட்டியது. உடனே அதை பற்றி காட்டமாக கட்டுரை எழுதி வெளியிட்டார்.

இதை படித்த மாவட்ட கலெக்டர், 2000 நெல்மூட்டைகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் அன்று பலராலும் பேசப்பட்டது.. பொதுவாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்ள துவக்கமாக இருந்ததே இந்த நெல்மூட்டை நிகழ்வுதான்.. இந்த புள்ளியிலிருந்துதான், விவசாயிகளின் பிரச்சனையை கையில் எடுத்தார் நல்லகண்ணு.

மீசையே முளைக்கவில்லை

பொதுவாழ்வில் 7 வருடம் சிறை தண்டனையை அனுபவித்தவர். அப்போது ஜெயிலில் நல்லகண்ணுவை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். மேலும் அவரது மீசையை கையாலேயே பிடுங்கி பிடுங்கி எடுத்தனர்.. மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்த மீசையை, சிகரெட் நெருப்பால் சுட்டு பொசுக்கினார்கள்.. இதனாலேயே நல்லகண்ணுக்கு கடைசிவரை மீசையே முளைக்காமல் போய்விட்டது.

ஆனால், தன்மீது குற்றம் சாட்டப்பட்ட எவருடைய பெயரையும் அவர் சொல்லவில்லை. அவர்களது இருப்பிடத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை. நல்லகண்ணுவின் அச்சமற்ற மன உறுதிக்கு இதுவே சாட்சி.

வெடிகுண்டு வைத்திருந்ததாகவும், சதித்திட்டம் தீட்டியதாகவும் புனையப்பட்ட பொய்வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.. 7 வருடங்களுக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சாதி ஒழிப்பு போராட்டம்

பலமுறை சிறை சென்றதால், இவருக்கு யாருமே பெண் தர முன்வரவில்லை. அப்போது சாதி ஒழிப்பு போராளி ஒருவர், ஆசிரியையாக பணிபுரியும் தன்னுடைய மகள் ரஞ்சிதம் என்பவரை நல்லகண்ணுவுக்கு திருமணம் செய்து தர முன்வந்தார்.. அந்த கிராமத்தில் சாதி ஒழிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பலர் கொல்லப்பட்டனர். அதில் நல்லகண்ணுவின் மாமனாரும் ஒருவர்.

மாமனார் மறைந்தபோது, அவரது மறைவிற்கு அரசு சார்பில் இழப்பீடு தரப்பட்டது.. ஆனால் அந்த பணத்தையும், அதே போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த 2 குழந்தைகளின் படிப்புக்காகவே தந்துவீட்டார் நல்லகண்ணு.

தலைவர்கள் பெயர்கள்

அது மட்டுமல்ல, தன் மாமனாரை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் கூடாது என்று தன் சொந்தங்களிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார்..

தென்மாவட்டங்களில் ஊர் ஊராக நடந்தே சென்று மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி, கலவரத்தை அடக்கினார். மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்கள் பெயர் சூட்டுவது சாதி கலவரத்துக்கு காரணமாக இருப்பதாகவும், அதனால் அந்த பெயர் வைக்கும் முறையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.. நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தலைவர்கள் பெயரை நீக்கியது.


மணல் கொள்ளை

கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம் கம்பை எடுத்து கொண்டு ஓடியதை கண்டு மலைத்து போனார்கள் மக்கள்.

தன்னுடைய இனத்து மக்களையே எதிர்த்துப் போராடி, அடித்தட்டு மக்களை தட்டி எழுப்பி, சமூகநீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடிய அற்புத மனிதர் நல்லகண்ணு.. மக்களுக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்..

நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் இறுதிமூச்சுவரை தொடர்ந்து போராடிய நெஞ்சுரம் மிக்கவர்.

விவசாய சங்கங்கள்

தன்னை எப்போதும் யாரும் எளிதில் அணுகக் கூடிய வகையிலேயே வைத்திருந்தார் நல்லகண்ணு.. தன்னை குறித்த எந்த மாயைகளையும், பிம்பங்களையும் உருவாக்கி கொள்ள அவர் அனுமதித்ததே கிடையாது.. யார் எங்கு அழைத்தாலும் உடனடியாக அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடியவராக இருந்தார்.. பாசாங்கற்றத் தன்மையே, அவரை மக்களுக்கு நெருக்கமானவராக மாற்றிவிட்டது.

இயல்பிலேயே கடுமையான உழைப்பாளி நல்லகண்ணு.. விவசாய சங்கத்திற்கு பொறுப்பேற்ற காலத்திலிருந்து சுற்றிச்சுழன்று ஓடிக்கொண்டே இருந்தவர்.. பஸ் வசதியில்லாத கிராமங்களுக்கும், நடந்தே சென்று விவசாய சங்கத்தை கட்டமைத்தவர்..

நிழலும் ஒழுக்கமானது

தன்னுடைய 100 வயதிலும்கூட அவராகவே எழுந்து நடமாடினார்.. போன் செய்தாலும் அவரேதான் எடுத்து பேசுவார்.. கூட்டங்களில் பங்கேற்க எங்கு சென்றாலும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும்சரி, தன்னுடைய துணிகளை தானே துவைத்து கொள்வார்.. தன்னை சந்திக்க வந்தாலும் இடுப்பில் மடித்து சுருட்டி வைத்திருக்கும் கடலை மிட்டாயை எடுத்து தந்து அன்பாக சாப்பிட சொல்வார்..

நல்லகண்ணு கடுமையாக பேசி யாருமே பார்த்திருக்க முடியாது.. எதையும் பொறுமையாக கையாளுவதுடன், அதை மென்மையான பேச்சில் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்.

எளிமையை வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்தவர்.. தன்னுடைய இயக்கத்தின் கொள்கைப் பிடிப்புக்காகவே வாழ்ந்து மறைந்துள்ளார்... இதுவரை எந்த எதிரிகளையும் சம்பாதித்ததில்லை.. இதுவரை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாதவர்... நல்லகண்ணுவின் நிழல் கூட ஒழுக்கமானது!!

அந்தவகையில், இந்த நூற்றாண்டின் மிக அதிசயமான, அபூர்வமான ஆளுமையாக அறியப்படுகிறார் மூத்த தோழர் நல்லகண்ணு...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+