நல்லகண்ணு உடல் இன்று மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை: வாழ்நாள் போராளி நல்லகண்ணு இன்று மதியம் நம்மைவிட்டு பிரிந்துள்ளார். 101 வயதான அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார். நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என் இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101. வயதுமூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தீடிரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

வாழ்நாள் போராளி ஆர் நல்லகண்ணு
இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பிய அவர் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து 25 வது நாளாக மருத்துவனையில் இருந்து அவருக்கு இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று மாலை 5 மணி முதல்
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் சென்னை தி நகரில் உள்ள சிபிஐ கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பாலன் இல்லத்தில் நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இன்று மாலை 5 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதன் பின்னர் மருத்துவ ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு நல்லகண்ணு உடல் ஒப்படைக்கப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
அரைக்கம்பத்தில் கொடி
கம்யூனிஸ்டு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் செங்கொடி ஒருவாரம் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் உள்ள கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் நல்லகண்ணு. நாட்டின் முன்னோடி அரசியல் தலைவரும், தலைசிறந்த பொதுவுடைமையாளரும் கூட.. தகைசால் தமிழர் விருது வழங்கி நல்லகண்ணுவை தமிழக அரசு பெருமைப்படுத்தியது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
முன்னதாக கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மருத்துவமனையில் இருந்து தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நல்லுடல் இன்று (25.02.2026) மாலை 5 மணி முதல், நாளை 26.02.2020 பிற்பகல் 3 மணி வரை 43 செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தி. நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் (பாலன் இல்லம்) பொதுமக்கள் பார்வைக்கும், மரியாதைக்கும் வைக்கப்பட்டிருக்கும்.
நாளை மாலை 5 மணிக்கு அன்னாரது நல்லுடல் பொதுமக்கள் அணி வகுப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ ஆய்வுக்காக கொடையளிப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு எழு நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் வகையில் செங்கொடிகள் அரைக் கம்பத்தில் தாழ்த்தி பறக்கவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications