“ஆசிரியர்களின் உரிமையை பறிப்பது சட்ட விரோதம்”.. தமிழக அரசுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வந்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தியுள்ளனர். கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 25ம் தேதி முதலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரி 27ம் தேதி முதலும், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று 28ம் தேதி முதலும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வந்தனர்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை 14 ஆண்டுகளாகவும், பணி நிலைப்புக் கோரிக்கை 12 ஆண்டுகளாகவும், பழைய ஓய்வூதியக் கோரிக்கை 20 ஆண்டுகளாகவும் எழுப்பப்பட்டு வருகின்றன. தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஐந்தாண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர்கள் நிலையிலும், செயலாளர் நிலையிலும், இயக்குனர் நிலையிலும் பல கட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டன. அப்பேச்சுகளின் போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசு, அதை செயல்படுத்தாததால்தான் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
தொடர் போராட்டம் காரணமாக ஏராளமான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆசிரியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனையடுத்து நேற்று அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஆசிரியர்கள் அறிவித்தனர்.
எனவே போராட்டமும் தொடர்ந்து. இந்நிலையில் நேற்றிரவு டிபிஐ வளாகத்தில் அனைத்து நுழைவுவாயில்களுக்கும் போலீசார் பூட்டு போட்டனர். இதனையடுத்து இன்று அதிகாலை ஆசிரியர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் நராயணன் திருப்பதி,
"பள்ளி கல்வி இயக்குனர் வளாகத்தில், பல நாட்களாக தங்கள் உரிமைக்காக, நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து கடுமையாக போராடி வந்த ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் அறிக்கையில் தி மு க அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியுள்ளதோடு, ஆசிரியர்களின் உரிமையை பறிக்கும் இந்த செயல் சட்ட விரோதமானது. உடன் ஆசிரியர்களை விடுதலை செய்வதோடு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என தனது X சோஷியல் மீடியா தளத்தில் பதவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications