சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சமூக நீதி போராட்டத்தில்.. திமுக துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை.." நாராயணன் திருப்பதி அட்டாக்

Google Oneindia Tamil News

சென்னை: சமூக நீதிக்கான போராட்டத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்றும் பாஜக உருவாக்கித் தந்து, நிலைநாட்டிய சமூக நீதிக்கு எந்த சோதனையையும் வராமல் பார்த்துக் கொள்வதே திமுகவுக்கு சாதனை தான் என்றும் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய அளவிலான 'சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்' கருத்தரங்கு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டிற்கா நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்துப் பேசினார்.

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அமோகம்.. பகீர் கிளப்பும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி! கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அமோகம்.. பகீர் கிளப்பும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி!

 முதல்வர் பேச்சு

முதல்வர் பேச்சு

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம். ஓபிசி 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக, சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை என்பது சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தச் சாதனையை நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில், திமுக மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது என்பதைத் தலை நிமிர்ந்து சொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

 மண்டல் ஆணையம்

மண்டல் ஆணையம்

இந்நிலையில், முதல்வரின் இந்த கருத்துக்குத் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. மக்கள் மன்றத்திலும், பார்லிமென்டிலும், சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வழியே இந்த சாதனை பெற்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆம், சரிதான், மக்கள் மன்றத்தில் அளித்த தீர்ப்பினால் அடல் பீகாரி வாஜ்பாய், அத்வானி அமைச்சர்களாக இருந்த எங்கள் ஜனதா கட்சியின் ஆட்சியில் (1977-79) தான் மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது.

 ஒரே கட்சி பாஜக

ஒரே கட்சி பாஜக

1989 நாடாளுமன்ற தேர்தலில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துவோம்" என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே வி.பி.சிங் அரசு மண்டல் ஆணையத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க முடிந்தது. அப்போது, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜிவ் காந்தி நாடாளுமன்றத்தில், இந்த இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து, இந்த இட ஒதுக்கீடு தேசத்தைப் பிளக்கும் என்று ஒன்றரை மணி நேரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது. அரசியல் அதிகாரத்திற்காக சமூக நீதியை (மண்டல் ஆணையத்தை) பத்து வருடங்கள் குழி தோண்டி புதைத்தது திமுக -காங்கிரஸ் கூட்டணி என்பதே உண்மை.

 69% இட ஒதுக்கீடு

69% இட ஒதுக்கீடு

1993-இல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது சட்டசபையில் கொண்டு வந்த மசோதாவினால்தான் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது. ஜூன் 1994-இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, ஆகஸ்ட் 1994-இல் 9வது அட்டவணைக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம் சட்ட பாதுகாப்பு பெறப்பட்டு யாராலும் போராட்டம் நடத்த முடியாத நிலை உருவானது.

 ஓபிசி இட ஒதுக்கீடு

ஓபிசி இட ஒதுக்கீடு

2016-இல் சலோனி குமாரி வழக்கில் "மருத்து படிப்பு அனுமதியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கத் தயாராக உள்ளோம், உத்தரவிடுங்கள்" என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலேயே கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு குழுவினை அமைத்து இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை உறுதி செய்யச் சொன்னது.

 பாஜக & அதிமுக

பாஜக & அதிமுக

அதனடிப்படையிலேயே, மத்திய பாஜக அரசு குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உத்தரவிட்டு உறுதி செய்தது பாஜக அரசு. ஆக, இட ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உறுதி செய்தது பாஜகதான் என்பதையும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுகதான் என்பதையும் யாராலும் எப்போதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

 துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை

துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான போராட்டத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதே நாடறிந்த உண்மை. ஆகையால் சமூக நீதிக்கான சாதனையைச் செய்தது திமுகதான் என்று பெருமை தேடிக்கொள்வதை விட்டுவிட்டு பாஜக உருவாக்கித் தந்து, நிலைநாட்டிய சமூக நீதிக்கு எந்த சோதனையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே, அதுவே திமுகவின் சாதனைதான் என்பதை திமுக தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
BJP's Narayanan Tirupati slams that DMK doesn't have any role in ensuring Social justice in India: Tamilnadu BJP about OBC reservation in medical studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X