நான் அராஜகம் செய்றேனா.. பொய்! இன்னமும் எங்களை கேவலமாக நடத்துறாங்க.. நரிக்குறவ பெண் அஸ்வினி விளக்கம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஹோட்டலில் சாப்பிட சென்றால் தீண்டாமை பார்க்கிறார்கள் அதை தட்டி கேட்டதற்கு என் மீது கேஸ் கொடுக்கிறார்கள் என நரிக்குறவ பெண் அஸ்வினி விளக்கமளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.
அப்போது அவர் கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் அவரே புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த கோயிலுக்கு சென்ற அமைச்சர் பிகே சேகர் பாபு அந்த பெண்ணுடனும் மற்ற நரிக்குறவ சமூகத்தினருடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

தீபாவளி பண்டிகை
இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கும் சென்று அவரை திக்குமுக்காட வைத்தார். இந்த நிலையில் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது புகார்கள் எழுந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
அதாவது தான் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர் என கூறி மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு டிபன் கடைக்கு சென்று ரூ 10 க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும் கொடுக்க முடியாது என கூறிய உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. உணவு சரியில்லை என்றால் முதல்வரிடம் சொல்லிவிடுவதாகவும் தான் சொன்னால் அதிகாரிகள் உடனே வந்துவிடுவார்கள் என்றும் மிரட்டினாராம். அது போல் கிழக்கு ராஜ வீதியில் உள்ள மருந்து கடையிலும் மருந்து சரியில்லை, உன் கடையை காலி செய்கிறேன் என அவர்களுடன் தகராறில் அஸ்வினி ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதாக மருந்து கடை உரிமையாளர் கூறுகிறார்.

பேக்கரி கடை
மேலும் அதே பகுதியில் ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் போன போது உரிமையாளர் காசு கேட்டதற்கு கேக் நல்லாவே இல்லை என கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதே போல் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையிலும் டீ சரியில்லை என கூறி காசு கொடுக்காமல் அஸ்வினி அராஜகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அராஜகம்
நாளுக்கு நாள் அஸ்வினி இது போல் அராஜகம் செய்வதாக மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற வியாபாரிகள் சங்கத்தினர் புகார் கொடுத்தனர். இதுகுறித்து அஸ்வினி கூறுகையில், என் மீது பொய் புகார் கூறுகிறார்கள். எங்களிடம் தீண்டாமை பார்க்கிறார்கள். அதை திசை திருப்ப என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஹோட்டல்களில் சாப்பிட சென்றால் மற்றவர்களுக்கு சில்வர் தட்டில் இலை வைத்து தருகிறார்கள்.

பிளாஸ்டிக் தட்டு
ஆனால் எங்கள் இனத்தினர் சென்றால் பிளாஸ்டிக் தட்டில் இலை வைத்து தருகிறார்கள். மேலும் மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்படியே தட்டை வைத்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் சாப்பிட்ட பிறகு அந்த இலையை குப்பையில் போட்டு தட்டை கழுவி கொடுக்க சொல்கிறார்கள். இதை நான் தட்டி கேட்டேன். அதற்கு முதலமைச்சர் உன் வீட்டில் வந்து சாப்பிட்டிருந்தாலும் நாங்கள் உங்களை ஒதுக்கிதான் வைப்போம் என்கிறார்கள் என்றார் அஸ்வினி.












Click it and Unblock the Notifications