வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்.. வெளிநாடு போல இல்லை! இந்தியாவில் திறன் குறைவு! மனோ தங்கராஜ் ஆதங்கம்
சென்னை: வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் இருப்பதாகவும் வெளிநாட்டு முறை போல் இல்லாமல் இந்திய முறை திறன் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. மேகங்கள் மொத்தமாக குவிந்து, விடமால் சுமார் 36 மணி நேரமாக நிற்காமல் கொட்டிய கனமழையால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது.

இதிலும் குறிப்பாக திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம் போன்ற கடற்கரையோர பகுதிகளில் 40 முதல் 90 செமீ மழை பெய்துள்ளது. நெல்லையில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 66 செமீ மழை பெய்தது. இதனால், 4 மாவட்டத்திலும் பெரும்பாலன இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிக மழை பொழிவை எதிர்கொள்ளாத உடன்குடி, திசையன் விளை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட மிக மிக கனமழை பெய்துள்ளது.
ஏமாற்றம் அளிக்கிறது: பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆறுகளில் கூட தற்போது வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பாய்ந்து வருகிறது. இதேபோல் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நிவாரண பணிகள் செய்யகூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்று மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் இருப்பதாகவும் வெளிநாட்டு முறை போல் இல்லாமல் இந்திய முறை திறன் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தென் மாவட்ட மழை பாதிப்பில் வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் இருக்கிறது. முக்கியமான நேரத்தில் வானிலை ஆய்வு மையத்தின் துல்லியமான மற்றும் சரியான அறிவிப்பு குறைந்து இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர் என்பது நமது கூட்டு பிரதிபலிப்பு.
மேம்படுத்த வேண்டும்: காலநிலை நெருக்கடிக்கு நமது பதில் விரைவாகவும் பயனுள்ளதாகவும் நிலமையின் தீவிரத்தை பிரதிபலிக்க வேண்டும். இது கூட்டு பொறுப்பு மற்றும் செயலுக்கான நேரம். இந்த சவாலை ஒன்றாக எதிர்கொள்ள உறுதி கொள்வோம் கால நிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினை. இது இந்தியாவை நேரடியாக பாதிக்கிறது. மத்திய அரசு தனது அணுகுமுறையை மறுசீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன் கணிப்பு மாதிரிகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
வெளிநாடு போல் இல்லை: இத்தகைய பேரழிவுகளை முன்னறிவிப்பதற்கும் அழிவுகரமான விளைவுகளை குறைப்பதற்கும் சிறப்பான முறையில் தயாராக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது இல்லை என்றாலும் கூட்டு பொறுப்பு உள்ளது என்ற அடிப்படையில் தமிழக அரசு இயன்றதை செய்து இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துல்லியமான அறிவிப்புகள் மூலம் சொத்து சேதங்களின் அளவை குறைத்து இருக்கலாம்.
வெளிநாடு முறை போல் இல்லாமல் இந்திய முறையின் திறன் குறைவாக உள்ளது. வானிலை முன்னறிவிப்பில் நேரவேறுபாடு இருப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டதற்கும் உண்மையான வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்குமான கால அளவு மிகவும் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications