பூஜ்ஜியமான நீட் கட் ஆப்! மருத்துவப் படிப்பில் பணக்காரர்கள் ராஜ்ஜியம்?
உயர் சிறப்புப் படிப்பு கலந்தாய்வுக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைத்ததற்குக் கல்வியாளர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நீட் தேர்வுக்காக நோக்கம் முழுமையாகச் சிதைந்துபோய் விட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அவற்றில் காலியாக சுமார் ஆயிரம் இடங்கள் உள்ளன.
அவற்றை நிரப்புவதற்காக 'நீட்' கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைந்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெற்ற மாணவர்கள் 'பணம் இருந்தால் யாரும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலையே உள்ளது' என விமர்சித்திருந்தனர்.
கலந்தாய்வுக்கான சதவீத மதிப்பானது கடந்த டிசம்பரில் 50இல் இருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது. அதற்கே கடும் கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை தனியார் கல்லூரிகளுக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கும் சாதகமாகவே அமையும் எனக் கல்வியாளர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
பூஜ்ஜியம் கட் ஆப் எடுத்தாலே தகுதி பெற்றுவிடலாம் என்றால், இந்த நீட் தேர்வின் நோக்கம்தான் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"இந்த கட் ஆப் மதிப்பெண் குறைப்பு என்பது ஏற்கவே முடியாதது. மருத்துவம் போன்ற துறைகளில் இதைப்போன்ற தரக்குறைப்பை நாம் சகித்துக் கொள்ளவே முடியாது.
ஒரு மருத்துவர் தரமான படிப்பை மேற்கொண்டால்தான் தரமான மருத்துவம் என்று உறுதி செய்யப்படும். இது வெறும் கல்வி சம்பந்தமானது மட்டுமல்ல; பல லட்சம் உயிர்கள் சம்பந்தமானது. நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக வாழ்வது சம்பந்தமானது.
மருத்துவப் படிப்புகளில் இடங்கள் காலியாக இருப்பது ஒன்று குற்றமல்ல. அதற்குத் தகுதியான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். இது ஏதோ மருத்துவப் படிப்புகளில் மட்டும் நடக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் பொறியாளர் படிப்புக்கான இடங்கள் கூட நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கின்றன. இது தமிழ்நாட்டில் கூட நடக்கிறது. அதற்காக மாநில அரசு இருக்கையை நிரப்புவதற்காக கட் ஆப் மதிப்பெண்ணைக் குறைக்கவில்லை.
தேர்வின் தரத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்ததே இல்லை. இருக்கையை நிரப்புவது மட்டுமே தங்களின் கடமை என்று நினைத்து அவர்கள் அட்மிஷன் போடவில்லை.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளதோ எனச் சந்தேகம் எழுகிறது" என்கிறார் கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான கட்டணமாக ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி முதல் இரண்டரைக் கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழலில் நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைத்திருப்பது வசதி படைத்தவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற மோசமான சமுதாயத்தை உருவாக்கும். மருத்துவப் படிப்புகளில் ஏற்கெனவே சமூகநீதி சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஆகவே, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முதுநிலை தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்த போது, அதற்கு கடும் கண்டனத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர், 'நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது' என மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இப்போது உயர் சிறப்புப் படிப்பு கலந்தாய்வுக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications