"தமிழக சட்டசபை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை".. நீட் விலக்கில் முதல்வர் ஸ்டாலினின் அதிரடி..பின்னணி
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா இன்று தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடக்க உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சபாநாயகருக்கு திருப்பி உள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி உள்ளது.
இந்த சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.

நீட் மசோதா
இதற்கு முன் தமிழ்நாடு சட்டசபையில் இப்படி நடந்தது இல்லை. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை ஊடகத்திற்கு பத்திரிகையாளர் தராசு சியாம் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முன்பு மருத்துவ படிப்பில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததால் PET எனப்படும் தேர்வு முறை அமலுக்கு வந்தது.

எம்ஜிஆர்
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இந்த தேர்வு அமலுக்கு வந்தது. மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் 100 சதவிகிதம் பேர் இதில் இருந்துதான் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இதிலும் சில கோளாறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம வாய்ப்பு மாணவர்கள் வழங்கப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 50 சதவிகிதம் பேர் மட்டும் PET எனப்படும் தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அதிலும் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறப்பு கூட்ட தொடர்
இதனால் மொத்தமாக அந்த தேர்வும் கைவிடப்பட்டு பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு கூட்டத்தொடர் தமிழ்நாடு சட்டசபையில் பல விஷயங்களுக்காக நடந்துள்ளது. அதாவது முல்லைப்பெரியாறு பிரச்சனை, எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியதற்கான சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர், காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளாதது குறித்து சிறப்பு கூட்டத்தொடர் உள்ளிட்ட சில சிறப்பு கூட்டத்தொடர் கலந்து சில வருடங்களில் பல விஷயங்களுக்காக நடந்து இருக்கிறது.

நடந்ததே இல்லை
ஆனால் ஆளுநர் ஒருவர் மசோதாவை திருப்பி அனுப்பி அதற்காக மீண்டும் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது என்பது நடந்தது இல்லை. வரலாற்றில்.. 1970ல் இருந்து எடுத்துக்கொண்டால் 5 முறை மட்டுமே இப்படி ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மசோதாவை திருப்பி உள்ளனர். 1973ல் ஆளுநர் தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பினார். அதில் இருந்து வரிசையாக 5 முறை வேறு வேறு மசோதாக்கள் வேறு வேறு ஆளுநர்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டன.

வரலாற்றில் முதல்முறை
ஆனால் ஒரு முறை கூட அந்த மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அப்படியே அனுப்பி வைக்கப்படவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பினாலும் சரி, குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினாலும் சரி., அதற்காக சிறப்பு கூட்டம் கூட்டி மீண்டும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது இல்லை. பிடி அலக்சாண்டர் ஆளுநராக இருந்த போது தமிழ்நாட்டில் எம்எல்ஏக்களுக்கு எதிராக படம் எடுத்தால் 2 ஆண்டு தடை என்று சினிமா தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Recommended Video

நீட் மசோதா
இதை ஆளுநர் அலக்சாண்டர் திருப்பி அனுப்பினார். அதன்பின் ஆட்சி மாறி திமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் அந்த மசோதா கைவிடப்பட்டது. அதேபோல் வேறு வேறு மசோதாக்கள் சில ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பின் கைவிடப்பட்டது. ஆனால் இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவை மீண்டும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அப்படியே திருப்பி அனுப்பும் முனைப்பில் உள்ளது. இது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது, என்று தராசு சியாம் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications