பாஜக அரசின் சிறுபான்மை விரோதம்.. 1-8ம் வகுப்புக்கான ஸ்காலர்ஷிப் நிறுத்தம் - நெல்லை முபாரக் எதிர்ப்பு
சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கான மத்திய அரசின் ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், "நாடு முழுவதும், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் எனப்படும் கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2008-09ம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை நேரடி பணமாற்றம் மூலம் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுகிறது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதும், கல்விக்கான செலவினங்களுக்கான பொருளாதாரச் சுமையை குறைப்பதும், பெற்றோர்கள் குழந்தைகளை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி, பள்ளிக் கல்வியை முடிக்க வைப்பதை ஊக்குவிப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறுபான்மை மாணவர்கள்
இந்த திட்டத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட, முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருந்த இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், பாரசீகர், பௌத்தர் ஆகிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் இந்த கல்வி உதவித் தொகை திட்டமானது 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பானது, கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பித்து காத்திருந்த, 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் லட்சக்கணக்கான அனைத்து சிறுபான்மை சமூக மாணவர்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

அநியாயமான நடவடிக்கை
கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த உதவித் தொகை திட்டத்திற்காக மாணவர்களிடமிருந்து ஒன்றிய அரசால் விண்ணப்பம் கோரப்பட்டது. அதன்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் ஆன்லைனில் சரி பார்த்து முடித்து வரும் நிலையில், தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விண்ணப்பங்களை ரத்து செய்துள்ளது மிகவும் அநியாயமான நடவடிக்கையாகும்.

விரோத போக்கு
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், சிறுபான்மை சமுதாயத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்த்திடவும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் சுமையை குறைத்திடவும், பள்ளிக் கல்வியை இடைநிற்றல் இன்றி ஊக்குவிக்கும் நோக்கிலும் செயல்படுத்தப்பட்ட உன்னதமான திட்டத்தை ரத்து செய்ததன் மூலமாக, தனது சிறுபான்மை விரோத போக்கை ஒன்றிய பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது.

மீண்டும் உதவித்தொகை வேண்டும்
ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தது. ஆகவே, இந்த திட்டத்தின் உயரிய நோக்கத்தை கருத்தில்கொண்டு, கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிறுபான்மை சமூக மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications