NEP விவகாரம்: மாணவர்கள் விஷயத்தில் சமரசமே கிடையாது - தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: தேசிய கல்விக் கொள்கை விவகாரம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கிடையே பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதாக அனுப்பிய கடிதத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழகம் சமரசம் செய்து கொள்ளாது என்றும், தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக இருப்பதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி விடுவிக்கப்படும் என்று அமைச்சர் வெளிப்படையாகவே தெரவித்தார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், மீண்டும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தேசியக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே அனுமதி என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வந்தனர்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு அண்மையில் நடைபெற்றது. அப்போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என குறிப்பிட்டதால் திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தனது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர், அவைக் குறிப்பில் இருந்து அந்த சொல் நீக்கப்பட்டது. அமைச்சரின் அவமரியாதையான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநிலங்களவையில், தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதாக தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். அந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார். இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷ் மற்றொரு பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், புதிய கல்விக் கொள்கை, இருமொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு மீதான தாக்குதலானது மற்றொரு பிரச்சனையை மறைப்பதற்கான செயல். இது தமிழ் மொழியை பற்றியதானது மட்டுமல்ல. தமிழகத்தில் வெற்றிகரமான கல்வி மாடல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல தசாப்தங்களாக நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான கல்வி மாடல் இங்கு அமலில் இருக்கிறது. மாநில கல்விக் கொள்கை மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு வருகிறோம். எங்களது கல்வித் திட்டம் மனப்பாடம் செய்து கற்கும் கல்வி அல்ல. கருத்தியல் அடிப்படையிலான கல்வி. இது பல தலைமுறை மாணவ, மாணவிகளை மேம்படுத்தி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சிறந்து விளங்க உதவி புரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி பயின்று வருகின்றனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். மூன்றாவது மொழியைப் படிப்பதற்கான அவசியம் இருப்பின் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத் திட்டத்தை படிக்கின்றனர். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது எங்களின் ஆணி வேராக ஒன்றாக கலந்தது. எங்களுடைய கல்வி முறை ஏற்கனவே சிறந்த தொழில் முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டின் கல்வி முறை சிறந்து விளங்கி வரும் நிலையில், அதனை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது.
ஆங்கிலவழிப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்கின்றனர். அதில் சிறந்தும் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் மொழி எங்களுடைய பெருமை. உலகத்திற்கான வழிகாட்டி ஆங்கிலம். மாணவர்கள் ஏற்கனவே இந்த இருமொழியின் வலிமையான அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு மூன்றாவது மொழி தேவையில்லை.
தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் தமிழகத்தின் மாடலை ஏன் இடையூறு செய்ய வேண்டும். இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு பாடத்திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. கல்வி விவகாரத்தில் தமிழ்நாடு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை கண்டறிந்து வழங்குவதில் தமிழ்நாடு சமரசம் செய்யாது. எனவே, தமிழகத்தின் கல்வி திட்டத்தின் குறுக்கே வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications