வேகமாக பரவும் ஜேஎன் 1 கொரோனா..ஆனால் அச்சம் வேண்டாம்.. அமைச்சர் மாசு சொன்ன நல்ல செய்தி! என்ன சொன்னார்
சென்னை: இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஜேஎன்1 கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா, அதன் பிறகு உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.
கொரோனா வேக்சின், மாஸ்க் என அதன் பிறகு நாம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பை நாம் குறைத்தோம். இதற்கிடையே கொரோனா பாதிப்பு இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜேஎன் 1 கொரோனா: இந்தியா உட்பட பல நாடுகளில் இப்போது திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்போது பரவும் ஜேஎன் 1 என்ற புது வகை கொரோனாவே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த ஜேஎன் 1 கொரோனா என்பது ஓமிக்ரான் துணை வேரியண்டின் ஒரு திரிபாகும்.. இதனால் இந்தியா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் அதில் விதி விலக்கு இல்லை.
இதற்கிடையே பருவமழையில் பரவும் நோய் பாதிப்புகளில் இருந்து தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை தரமணியில் 10ஆவது வாரச் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு புதிய ஜேஎன் 1 கொரோனா குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சர் மா.சு: செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதும் அனைவருக்கும் தெரியும். அப்படிதான் இப்போது கொரோனா வைரஸ் ஜேஎன்1 என்ற உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த புது வகையால் இந்தியா மட்டுமின்றி தெற்கு ஆசியா முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஜேஎன் 1 வகை கொரோனா வேகமாகப் பரவினாலும் கூட அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த புதிய வகை கொரோனா பாதிப்பைக் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம். இந்த புதிய கொரோனா லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணியலாம். குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
தயார் நிலை: மேலும், கொரோனா பாதிப்பைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 1.25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஜேஎன் 1 கொரோனா என்பது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சர்வதேச வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும், கொரோனா வேக்சின் இந்த புது வேரியண்ட்டிற்கு எதிராகவும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications