சம்பவம் செய்யும் விஜய்? தமிழகத்தில் 3வது அணி என்ன செய்யும்.. அண்ணாமலை சொன்ன மிக முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அடுத்தாண்டு தேர்தலை மனதில் வைத்து எல்லா கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதற்கிடையே தமிழ்நாட்டில் இப்போது ஒரு புதிய அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறும் அண்ணாமலை, விஜய் அரசியல் தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் கணக்கை மனதில் வைத்தே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இப்போது வரை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சீராக இருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இதை நாம் சொல்ல முடியாது.

என்டிஏ கூட்டணி
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அதிமுக இணைந்தது. அதேநேரம் என்டிஏ கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இது பாஜகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார்.
சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நான் ஏற்கனவே சொன்னது போல இந்த விவகாரத்தில் எந்த தலைவர்களும் அவசரப்படக்கூடாது. பொறுமையாக என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூத்த தலைவர்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
ஒரே குறிக்கோள்
2025இல் திமுக ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்கிறது. வார்த்தை மோதல் எந்தவொரு தீர்வையும் கொடுக்காது. மோதலை அதிகரிக்கவே செய்யும். எனவே, இன்றைய தினம் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே செயல்பட வேண்டும். 2024 லோக்சபா தேர்தலில் அனைவரும் ஒரே அணியில் திரண்டிருந்தனர். எனவே, அனைத்து தலைவர்களும் கொஞ்சம் பொறுமையாக ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!
விஜய்
அடுத்த ஒரு மாதம் ரொம்ப முக்கியமாக இருக்கும். விஜய் வரும் செப்டம்பர் 13ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செல்கிறார். சீமானும் கடுமையான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத களச்சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எப்போதுமே இரண்டு முனை போட்டியே நிலவி வந்துள்ளது. ஆனால், இப்போது சூழல் மாறியிருக்கிறது. அடுத்த 2, 3 மாதங்களில் தமிழகத்தில் 3வது அணி வலியமையாக இருக்குமா என்பது தெரிய வரும். 4வது அணி குறித்தும் தெளிவான தகவல் கிடைக்கும்.
புறந்தள்ள முடியாது
2026 தேர்தலில் நாம் யாரையும் புறந்தள்ள முடியாது. யார் தமிழகத்திற்கு சிறந்த திட்டத்தை கொடுக்கிறார்களோ அவர்களே ஆட்சியை பிடிப்பார்கள். எனவே, இன்று நாம் களத்தில் கூர்மையாக அனைவரையும் அரவணைத்து, ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும். இதற்கான கடமை அனைத்து பாஜகவினருக்கும் இருக்கிறது. இதன் காரணமாகவே நானும் எந்தவொரு விஷயத்திலும் பேசவில்லை.
பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் நபர் டிடிவி தினகரன். பொறுமையாக நாம் இருக்க வேண்டும். கடந்த இரு, மூன்று நாட்களாக நடக்கும் விஷயங்கள் சலிப்பாகவே இருக்கிறது. ஆனால், எல்லாம் சீக்கிரம் சரியாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications