"பல கிமீ.. ரிஸ்கி மலைப்பாதை".. நீலகிரியில் 100% பழங்குடியினருக்கு வேக்சின் போட்டு சாதனை.. சபாஷ்!
நீலகிரி: நீலகிரியில் இருக்கும் பழங்குடியின மக்கள் எல்லோருக்கும் வேக்சின் போட்டு தமிழ்நாடு அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் இடையே கொரோனா வேக்சின் போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வமாக பல்வேறு மாவட்டங்களில் காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் வேகமாக வேக்சின் போட்டு வருகிறது.
தினமும் எவ்வளவு வேக்சின் தமிழ்நாட்டிற்கு வருகிறதோ அதெல்லாம் 24 மணி நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொடுக்கப்பட்டு உடனுக்குடன் மக்களுக்கு வேக்சின் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வேக்சின் போடுவதில் நீலகிரி மாவட்டம் புதிய சாதனை படைத்துள்ளது.

தயக்கம்
முதலில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் இடையே வேக்சின் போட்டுக்கொள்ள தயக்கம் இருந்தது. வேக்சின் குறித்த அச்சம், போதிய புரிதல் இல்லாத காரணத்தால் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ள முன்வரவில்லை. இந்த நிலையில்தான் நீலகிரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகளும், நிர்வாகிகளும் தொடர்ந்து மக்களை சந்தித்து வேக்சின் குறித்த புரிதலை ஏற்படுத்தி உள்ளனர்.

புரிதல்
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நீலகிரியில் பணிக்கு அமர்த்தப்பட்ட முதல் நாளில் இருந்து இவர்களுக்கு வேக்சின் போடுவது குறித்து கவனம் செலுத்தி, பழங்குடியின இளைஞர்களை சந்தித்து, வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த நிலையில்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேக்சின் போட முன் வந்துள்ளனர்.

வேக்சின்
ஆனால் மக்கள் வேக்சின் போட முன் வந்தாலும் இவர்கள் பல மலைப்பாங்கான இடங்களில் வசித்தனர். அவ்வளவு எளிதில் இவர்களின் இடத்திற்கு சென்று வேக்சின் போட முடியாது. பல 6 - 7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையில் தனி தனியாக வசித்து வந்தனர். இங்கெல்லாம் பாதைகளே கிடையாது.

சென்றனர்
ஆனாலும் ரிஸ்க்கான மலை பாதையில் மருத்துவ பணியாளர்கள், தோலில் வேக்சின் பாக்ஸ்களை சுமந்து கொண்டு, கஷ்டப்பட்டு மக்களின் வீடுகளுக்கே சென்று வேக்சின் போட்டுள்ளனர். முதல் ஒருவர், இருவர் என்று வேக்சின் போட முன்வந்த நிலையில், போக போக வரிசையாக பலர் முன் வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இவர்களுக்கு வேக்சின் போடுவதில் முன்னுரிமை கொடுத்துள்ளார்.

பாதுகாப்பு
பழங்குடியினரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதாலும், இவர்களுக்கு வேக்சின் போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 27032 பழங்குடியினர் நீலகிரியில் உள்ளனர். இதில் 21500 பேர் மட்டுமே வேக்சின் போட்டுக்கொள்ள தகுதியான 18+ வயது கொண்டவர்கள். இந்த நிலையில் நேற்று மாலையோடு நீலகிரியில் அனைவருக்கும் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது.

முதல் மாவட்டம்
இதன் மூலம் இந்தியாவிலேயே அனைத்து பழங்குடியின மக்களும் வேக்சின் போட்டுக்கொண்ட ஒரே மாவட்டமாக நீலகிரி உருவெடுத்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாவட்டமும் இந்த சாதனையை படைக்கவில்லை. எல்லா பழங்குடியின மக்களும் வேக்சின் போட்ட காரணத்தால் அப்பகுதி பழங்குடியின மக்கள் பாதுகாப்பதோடு அவர்களின் இனம் நீட்சி அடையவும் வழி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications