தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அங்கு நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று சிறுவன் ஒருவர் பலியாகி உள்ளார். அங்கு ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை கேரளாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தற்போது நிபா கேஸ்களும் ஏற்பட தொடங்கி உள்ளது. கோழிக்கோடு அருகே நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நிபா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளார்.

எப்படி?
நேற்று முதல்நாள் இரவு நிபா வைரஸ் அறிகுறியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று காலை ரிசல்ட் வருவதற்குள் அவர் உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். மிகவும் மோசமான உடல்நிலையுடன்தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை.

பாதிப்பு
இவர் மட்டுமின்றி இன்னும் 7 பேருக்கு இதே அறிகுறி ஏற்பட்டுள்ளது. இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிபா பாதிப்பு ஏற்பட்டதாக இன்று இணையத்தில் பரவியது. கோயம்புத்தூரில் ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மறுப்பு
ஆனால் இது தொடர்பான செய்திகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார் . தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை.இணையத்தில் பொய்யான செய்திகள் பரவுகிறது. யாரும் அதை நம்ப வேண்டாம். எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடக்கிறது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்
தற்போது தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. எல்லை மூடப்படவில்லை. போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மக்கள் கூட்டமாக வருவது தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் யாருக்கும் நிபா அறிகுறி ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸ்
நிபா வைரஸ் காரணமாக, கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்படும். இது இயல்பான அறிகுறி என்றாலும் மூளை வீக்கம், மனக்குழப்பம் போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் சுவாசப் பிரச்சனைகள் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2018ல் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதே வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. அப்போது கோழிக்கோடு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

எப்படி பரவும்
நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது ஆகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். பன்றிகள், வெளவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவும். 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications