வட தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்! தமிழக அரசு முழு வேகம்! சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்களோடு இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. தொடர்ந்து கொட்டும் மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வது, மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடனும் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 12 சிறப்பு அதிகாரிகளை நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 12 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களோடு இணைந்து இந்த சிறப்பு அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் நோக்கி மாற வாய்ப்பு இருப்பதால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்டும், சிவகங்கை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications