வீடு முற்றுகைக்கு 300 பேர் கூட வரலையே என கிண்டலடித்த சீமான்- 870 பெரியாரிஸ்டுகள் மீது போலீஸ் வழக்கு!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்னை நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்றதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 870 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட அமைப்பினரால் 300 பேரை கூட அழைத்துவர முடியவில்லையே என ஏற்கனவே சீமான் விமர்சனம் செய்திருந்த நிலையில் போலீசார் 870 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தந்தை பெரியார் தமிழருக்கு எதிரி; தமிழ் மொழியை இழிவுபடுத்தியவர்; தகாத உறவுகளை ஒப்புக் கொண்டவர்; கர்ப்பப்பையை அறுத்தெறியச் சொன்னவர் என இடைவிடாமல் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரை திடீரென சீமான் இழிவாகப் பேசியிருப்பது பெரியாரிய உணர்வாளர்களை மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சி அடையச் செய்து கடும் கண்டனங்களை தெரிவிக்கச் செய்தது.
மேலும் தந்தை பெரியார் கூறியதாக சீமான் பேசிவரும் கருத்துகளுக்கு ஆதாரங்களையும் பெரியாரிய உணர்வாளர்கள் கேட்டனர். ஆனால் சீமான் ஆதாரங்கள் தரவில்லை. இதனால் 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் வீடு முற்றுகையிடும் போராட்டத்துக்கு எதிராக சீமான் வீட்டில் நேற்று முன்தினம் இரவு முதலே கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் நிர்வாகிகளும் குவிந்தனர். அவர்களுக்கு இரவு, காலை, பிற்பகல் 3 வேளையும் உணவும் வழங்கப்பட்டது. அவர்களுடன் சீமான், மனைவி கயல்வழி அமர்ந்தும் சாப்பிட்டனர்.
இதனிடையே சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றதாக பெரியாரிய உணர்வாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அப்போது கருத்து தெரிவித்த சீமான், 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் என கூறிக் கொண்டு 300 பேரை கூட அழைத்துவரவில்லையே என கிண்டலடித்தார். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அனுமதியின்றி நடத்தியதாக மொத்தம் 870 பெரியாரிய உணர்வாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications