தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி குவிந்து கிடக்கிறது.. பற்றாக்குறையை போக்க ஓபிஎஸ் சொல்லும் ஐடியா
சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் யோசனை சொல்லியுள்ளார். தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள பல லட்சம் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த அரசுக்கு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: உணவுப் பஞ்சமும், தொற்று நோய்களும், அந்நியர்களின் படையெடுப்பும் வராதபடி நடத்தப்படுகிற நாடே நல்ல நாடு என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவற்றை செயல்படுத்தும் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
இதன் அடிப்படையில், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொடுந்தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டு டோஸ்
ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி (Two Doses) என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 16 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. 26-06-2021 அன்று காலை நிலரவப்படி, மொத்தம் 1,44,83,205 தடுப்பூசிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது , 10 விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை
இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் விநியோகிக்கப்பட்ட 13.9 இலட்சம் மருந்துகளில், எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், ஜூலை மாதத்திற்கு 71.5 லட்சம் மருந்துகளை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்றும், இதில் 17.75 லட்சம் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தனியார் மருத்துவமனைகள்
ஏற்கெனவே, 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில் ஜூலை மாதத்திற்கென்று மேலும் 17.75 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

அரசு மருத்துவமனைகளை நாடும் மக்கள்
பொதுவாக மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்குக் காரணம், அங்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதும், இணையதளத்திற்கு சென்று எந்தவிதமான பதிவும், முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாக தடுப்பூசி செலுத்துகின்ற வசதி உள்ளதும்தான். இதுமட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமுதாயநலக் கூடங்கள் போன்றவற்றில் இலவச தடுப்பூசி முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
Recommended Video

தனியார் கட்டணம் அதிகம்
அதேசமயத்தில், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தக்கூடிய நிலை இருக்கின்றது. இதுதவிர, முன்பதிவு அவசியம் என்ற நிலைமையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் காரணங்களால், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாத தடுப்பூசி மருந்துகள் லட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள பயன்படுத்தப்படாத மருந்துகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications