கூட்டணிக்கு கையேந்தும் அதிமுக.. 2026 தேர்தலில் 3ஆம் இடம் தான் கிடைக்கும்! ஒரே போடாகப் போட்ட ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை நோக்கி வந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது எனவும், இந்த நிலைமை நீடித்தால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை கழகத்திற்கு உருவாகும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அதிமுக தனது 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்தத் தருணத்தில் கழகம் கடந்து வந்த பாதையையும், தற்போதுள்ள நிலைமையையும் நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கலங்குகிறது, கண்களில் கண்ணீர் வடிகிறது.

கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, "ஒரு கூத்தாடியும் அவர் பின்னால் சில நூறு விசிலடிச்சாங் குஞ்சுகளும்" என்று ஏளனம் பேசப்பட்டது.

O Panneerselvam edappadi palaniswami aiadmk

ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஏளனப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்தவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தமிழ்நாட்டு தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக, ஏழை மக்களை ஏற்றிவிடுவதற்காக, நீதியை காப்பதற்காக, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, நிலைநாட்டுவதற்காக, தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை மலரச் செய்வதற்காக பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1977 ஆம் ஆண்டு மனிதாபிமானம் மிக்க ஒரு மாமனிதர், மனிதப் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது.

அதிமுக

"நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம்" என்று ஆட்சிக்கு வருவதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பே நாடோடி மன்னன் திரைப்படத்தில் தான் பாடிய பாடலுக்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செயல் வடிவம் கொடுத்த தீர்க்கதரிசி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் என்ற உடனேயே தமிழக மக்களின் நினைவிற்கு வரும் திட்டம் சத்துணவுத் திட்டம். இந்த மாபெரும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் இன்றளவிலும் ஏழையெளிய மாணவர்கள் கல்வி பெற்று உயர் பதவிகளை அடைந்து கொண்டிருப்பதோடு, இலட்சக் கணக்கான ஏழைப் பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

எம்.ஜி.ஆர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உறுதுணையோடு, தடைக் கற்களை படிக் கற்களாக்கி, சோதனைகளை சாதனைகளாக்கி, எதிர்ப்புகளை மக்கள் ஆதரவோடு முறியடித்து, கழகத்தையும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்தையும் மீட்டவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புதிய மறுமலர்ச்சியை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தில் ஏற்படுத்தியதன் காரணமாக மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத் தேர்தலில் அன்றைய ஆளும் கட்சி அபாரமாய் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டது.

ஜெயலலிதா

இதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொய்ப் பிரச்சாரங்கள் காரணமாக கழகம் ஆட்சிப் பொறுப்பினை இழந்தாலும், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மாண்புமிகு அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள்.

இரட்டை இலை

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றியை இழந்த நிலையில், மாண்புமிகு அம்மா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்கள். இதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், 39 தொகுதிகளிலும் 'இரட்டை இலை' சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, 37 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு கழகத்தை அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

சட்டமன்ற தேர்தல்

இதேபோன்று, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 'இரட்டை இலை' சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு.

அதிமுக ஆட்சி

தனது ஆட்சிக் காலத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், புதிய வீராணம் திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், கட்டணமில்லாக் கல்வித் திட்டம், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம். இரண்டாம் பசுமைப் புரட்சித் திட்டம், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தாயுள்ளத்தோடு அளித்த பெருமைக்குரியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

அணி பிளவு

23-01-2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று பெருமையோடு பேசினார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் தன் கடின உழைப்பால், ஆளுமைத் திறமையால், 2016 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திவிட்டு, 05-12-2016 அன்று நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

சட்டமன்ற பொதுத் தேர்தல்

மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் கழகம் தோல்வியை நோக்கியே பயணித்துக் கொண்டு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வருவது சகஜம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1980 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கழகம் தோல்வியுற்றது என்றாலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. பின்னர், தொடர் வெற்றிதான். இதேபோன்று மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றது.

அதிமுக தொடர் தோல்வி

ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தல் தோல்வி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி, 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்வி, 2019 ஆம் ஆண்டு ஊரசு உள்ளாட்சித் தேர்தல் தோல்வி. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் தோல்வி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் தோல்வி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்வி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி என தொடர் தோல்விகள். இது தவிர, விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இரண்டாவது இடைத் தேர்தல்களில் நிற்கவே முடியாத அவல நிலை.

பொதுச் செயலாளர்

"எந்தத் தொண்டனும் தலைவராகலாம்" என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த விதி மாற்றப்பட்டதையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்கியதையும் கழகத் தொண்டர்கள் ஏற்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சர்வாதிகாரத்தை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நிராகரித்துவிட்டார்கள்.

பேரறிஞர் அண்ணா

"The tree is known by the fruit, not by the label that is attached to the tree" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதாவது, பழத்தை வைத்துத்தான் ஒரு மரத்தைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து அல்ல என்பது இதன் பொருள். வெறும் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வீர வசனம் பேசுவது வெற்றிக்கு வழி வகுக்காது.

அதிமுக படுதோல்வி

மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்தபோது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று கிட்டத்தட்ட 45 விழுக்காடு வாக்குகளை அள்ளி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் 19.29 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட 26 விழுக்காடு வாக்குகளை கழகம் இழந்துவிட்டது. ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்ததோடு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காவது இடத்திற்கும் கழகம் தள்ளப்பட்டது.

அதிமுக தோல்வி அபாயம்

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கழகத்தை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணிக் கட்சிகள் கழகத்தை நோக்கி வந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது கழகத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலைமைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தள்ளப்பட்டதற்குக் காரணம் கழகம் பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதுதான். இந்த நிலைமை நீடித்தால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை கழகத்திற்கு உருவாகும்.

ஒருமைப்பாடு அழைப்பு

இப்பொழுது வெற்றி பெறவில்லை என்றால் எப்பொழுதும் வெற்றி இல்லை என்பதுதான் கள யதார்த்தம். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. 'வாழ்வா, சாவா' என்ற நிலைக்கு கழகம் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை மனதில் நிலைநிறுத்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில், பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+