ஓபிஎஸ் உடனே இதை செய்ய வேண்டும்.. பறந்து வந்த பாயிண்ட்.. ஆகா எடப்பாடிக்கு இப்படி கூட செக் வைக்கலாமா?
அதிமுக விதிகள் படி பார்த்தால் இரட்டை இலையில் ஒரு இலை எடப்பாடிக்கும், ஒரு இலை ஓ பன்னீர்செல்வத்திற்கும் வழங்கப்படும்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தொட்டதெல்லாம் தோல்வி என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு இங்கே அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார். இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு முக்கியமான அறிவுரை ஒன்றை மூத்த அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி வழங்கி உள்ளார்.

பேட்டி
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் முன்பே சொன்னது போல இடைத்தேர்தல் என்பது பெரிய விஷயம் இல்லை. ஆர்.கே நகர் தேர்தலில் மூன்றாம் இடம் வந்த திமுக அதற்கு பின் ஆட்சி அமைத்தது. முன்னாள் நடக்கும் இடைத்தேர்தலுக்கும் அதன்பின் நடக்கும் நாடாளுமன்ற, சட்டசபை பொதுத்தேர்தலுக்கும் தொடர்பு இருக்காது. ஒரு தொகுதி என்பது தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை காட்டாது. இடைத்தேர்தலை இதனால் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. எடப்பாடிக்கு எவ்வளவு.. பன்னீருக்கு எவ்வளவு.. யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.

ஈரோடு கிழக்கு
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இவர்களில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்காது.ஒருவருக்கு அமைப்பு ரீதியாக பலம் இருக்கிறது. ஒருவருக்கு கொங்கு மண்டல பலம் உள்ளது. ஒருவருக்கு முக்குலத்தோர் பலம் உள்ளது. இதனால் யாருக்கு உண்மையான பலம் இருக்கிறது, எடப்பாடிக்கு எவ்வளவு.. பன்னீருக்கு எவ்வளவு.. யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும். இடைத்தேர்தல் முடிவை வைத்து என்ன நடக்கும் என்று பார்க்க வேண்டும்.

சிவசேனா
சிவசேனா வழக்கில் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளனர். அதிமுக விதிகள் படி பார்த்தால் இரட்டை இலையில் ஒரு இலை எடப்பாடிக்கும், ஒரு இலை ஓ பன்னீர்செல்வத்திற்கும் வழங்கப்படும். இப்போது எடப்பாடி என்னமோ தனக்கு சின்னம் கிடைத்துவிட்டது போல நடந்து கொண்டு இருக்கிறார். இது எல்லாம் தற்காலிகம்தான். அவருக்கு தாற்காலிகமாகவே சின்னம் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டோக்கன் போல ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பிரச்சாரம் செய்வார். இதை தவிர பன்னீர்செல்வம் இதில் களமாட வாய்ப்பு இல்லை.

ஓ பன்னீர்செல்வம்
என்னை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் அதிமுக வேட்பாளர் வாங்கும் வாக்குகளில் தனக்கும் பங்கு உள்ளது என்று காட்ட முடியும். தன்னுடைய ஆதரவும் தென்னரசுவிற்கு இருந்தது என்று காட்ட முடியும். தென்னரசு குறைவான வாக்குகளை கூட எடுக்கட்டும். அந்த வாக்குகளில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் காட்ட வேண்டும். அதனால் ஓ பன்னீர்செல்வம் களத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நான் வழங்கும் அறிவுரை இதுதான். இந்த ஒரு தேர்தலை வைத்து கட்சிக்குள் யார் வெற்றிபெற்றனர் என்பதை சொல்ல முடியாது. ஆனால் தனது பிடியை இழக்காமல் இருக்க ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications