சென்னை மாங்காட்டில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்ட கோவில்... காலையில் மக்களுக்கு ட்விஸ்ட்
சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இரவில் இருந்த கோவில், காலையில் மாயமாகி உள்ளது. இரவோடு இரவாக அதிகாரிகள் அதிரடியாக அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வரலாறு காணாத அசுர வளர்ச்சியால், கடந்த 30 வருடங்களில் நீர் நிலைப்பகுதிகள் மிக மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. அரசியல்வாதிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலர் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். கடந்த 2015 வரை நீர் நிலை ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் அரசு ஓரளவு நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொண்டிருந்தது. மக்கள் பல காலமாக அங்கு வாழ்கிறார்கள் என்கிற அடிப்படையில் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை..

ஆனால் 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு ஆக்கிரமிப்புகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றன. அதன்பிறகு புதிதாக யாருமே ஆக்கிரமிப்பு செய்ய முடியாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் போட்ட எந்த வழக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பது இல்லை.. எல்லா ஆக்கிரமிப்புகளையும் இடித்து அகற்ற உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டன.
இதில் கோவில், மசூதி, சர்ச், வீடு என எது ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தாலும் அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டுவிட்டன. அதேநேரம் சென்னையை பொறுத்தவரை மிகவும் சிக்கலான நீர் நிலை ஆக்கிரமிப்புகளை மட்டும் முதற்கட்டமாக அரசு அகற்றி வருகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படும் என்கிற இடங்களாக பார்த்து அரசு அகற்றி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் கால்வாய்கள் இல்லாத இடங்களில் புதிய கால்வாய்களை அமைப்பது, தண்ணீர் வெளியே முடியாத இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற செயற்கையாக கால்வாய்களை அமைப்பது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் நீர்நிலைகள் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை இப்போது அரசு அதிரடியாக அகற்றி வருகிறது.
அந்த வகையில் சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலையில் கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதன் முன் பகுதியை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்ததாம். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே பகல் நேரத்தில் கோவிலை இடித்து அகற்றினால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இரவோடு இரவாக நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலின் முன்பகுதியை இடித்து அகற்றியிருக்கிறார்கள். இரவில் இருந்த கோவில் பகலில் பார்த்தபோது முன் பகுதி இடிக்கப்பட்டு பாதி கோவில் மாயமாகி இருப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வட சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட் பகுதியில் இரவோடு இரவாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications