Old Pension Scheme: எங்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம்.. களத்தில் குதித்த ஊராட்சி செயலர்கள்! அரசுக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அவரை சந்தித்து கருத்துருக்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய ஊழியர்களாக இருக்கும் ஊராட்சி செயலாளர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்தியா முழுவதும் 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து மத்திய அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வந்தது. இதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே நடைமுறையில் இருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்
திமுக, அதிமுக என நான்கு முறை ஆட்சி மாற்றம் நடைபெற்ற போதிலும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக 400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்காவது வருட ஆட்சி நிறைவடைந்து, இறுதியாண்டில் திமுக அரசு பயணிக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை.
தமிழக அரசு
அதே நேரத்தில் கடந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு, ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இருந்தபோதும் பழைய ஓய்வூதிய திட்டம் தான் தங்களுக்கு வேண்டுமென ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தர தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ககன்திப் சிங் பேடி குழு
இந்தக் குழு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களில் ஆய்வு செய்தது. மேலும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதுவரை 120க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அந்தக் குழுவிடம் கருத்துருவை வழங்கி உள்ளன.
ஊராட்சி செயலாளர்கள்
இந்நிலையில் அரசு ஊழியர்களைப் போலவே தங்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது பதிவூறு எழுத்தர் நிலையில், எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெற்று வரும் நிலையில், ஊராட்சி செயலர்களுக்கு பதிவூறு எழுத்தர்களுக்கான எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அந்த சலுகைகளை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ககன்தீப் சிங் பேடி குழுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு உறுதி
சமீபத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு அமைத்துள்ள குழுவினரிடம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் இந்த மனுவை வழங்கி இருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பல கட்டங்களாக இது தொடர்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊராட்சி செயலர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications