அரசு நிறுவனங்களுக்கும் "ஆன்லைன்" பத்திரப்பதிவு.. தமிழகத்தில் புதிய அனுமதி! யாருக்கெல்லாம் இந்த வசதி?
சென்னை: தமிழகத்தில் இனி சில பத்திரங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் ஆபீசுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது. அது என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்ப்போம்...!!
தமிழகத்தில் பத்திரப்பதிவு வேலைகளை கொஞ்சம் சுலபமாக்குவதற்காக, "வருகையில்லா ஆவணப்பதிவு" என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் குறிப்பிட்ட சில ஆவணங்களை பதிவு செய்ய ரிஜிஸ்டர் ஆபீசுக்கு நேரில் போக வேண்டியதில்லை.. ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்..

வருகையில்லா ஆவணப்பதிவு
இந்த வசதி தொடக்கத்தில் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது, ஆவணங்களை ஆன்லைனில் கொடுத்து, தேவையான வேலைகளையும் அங்கேயே முடிச்சுக்கலாம்.. இதனால் நேரமும் மிச்சமாகும், ரிஜிஸ்டர் ஆபீசுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அலைச்சலும் குறையும்.
இப்போது இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு வசதி இன்னும் சில அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது..
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பதிவு செய்யலாம்.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிவுத்துறையை தொடர்பு கொண்டு "லாக்-இன்" அனுமதியை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த வசதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஆபீசில் இருந்தபடியே பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய கொடுக்கலாம்.
அதேபோல, பதிவு முடிந்த பிறகு, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆன்லைன் மூலமாகவே பெறும் வசதியும் உள்ளது.. இதனால் ஒவ்வொரு பத்திரத்துக்காகவும் சார்பதிவாளர் ஆபீசுக்கு போய் வர வேண்டிய அலைச்சலும் குறையும்.
இதில் நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான பத்திரங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே இருக்கும் உரிமையை அடுத்தவருக்கு மாற்றும் ஆவணங்களையும் ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம்..
ஆன்லைன் பதிவு
இந்த வருகையில்லா ஆவணப்பதிவு திட்டமானது, கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி தொடங்கப்பட்டது... இந்த திட்டம் தொடங்கிய 44 நாட்களிலேயே 1 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக பதிவுத்துறை ஏற்கனவே சொல்லியிருந்தது. அதாவது, 1,00,134 ஆவணங்கள் இந்த முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால் குறிப்பாக வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற நிறுவனங்கள் அடிக்கடி செய்யும் பத்திரப்பதிவு வேலைகள் இனி இன்னும் சுலபமாகிவிடும்.. ஒரே இடத்திலிருந்தே ஆவணங்களை கொடுத்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தையும் வாங்கிக்கொள்ள முடிவதால், பழைய முறையைவிட நேரமும் மிச்சமாகும்.. அலைச்சலும் குறையும்.
அதுவும் ஒரே நாளில் நிறைய பத்திரப்பதிவு வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு இது இன்னும் சுலபமாகவே இருக்கும்.. இனி பத்திரப்பதிவு வேலைகள் எப்படி மாறப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்...!!


Click it and Unblock the Notifications
