குழந்தைகளுக்கு வேக்சின்கூட இல்லாத சூழலில் பள்ளிகள் திறப்பு.. அவசரம் காட்டும் அரசுகள்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப். 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரு சேர கருத்துகள் வெளியாக தொடங்கியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பரவ தொடங்கி கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. 2ஆம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை பற்றிய தகவல்களும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. அடுத்த அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு
இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து உச்சபட்ச கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது. மருத்துவ வல்லுநர்களுடன் நடந்து ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி
கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், பள்ளிகள் திறப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரேசேர கருத்துகள் வரத் தொடங்கியுள்ளன. உலக சுகாதார அமைப்பு கொரோனா இன்னும் முழுமையாக விலகவில்லை என்றும் இதனால் தளர்வுகள் அறிவிக்கும்போது உட்சபட்ச கவனம் தேவை என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. வழக்கமான தளர்வுகளிலேயே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள நிலையில், குழந்தைகள் உடல்நிலையில் நேரடியாகச் சம்பந்தம் இருக்கும் பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டுவது ஏன் எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தஞ்சை பள்ளி
கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதிலிருந்தே நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லனை் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில் முதல் அலை கட்டுக்குள் வந்த போது, இடையில் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள். ஆசிரியர்கள் எனப் பலருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல மீண்டும் ஒரு முறை நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வேக்சின் இல்லை
அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளில் சிறார்களுக்கான கொரோனா வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் தற்போது வரை 18+ கடந்தவர்களுக்கு மட்டுமே வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோவாவாக்ஸ், கோவிஷீல்டு வேக்சின்கள் சோதனையிலிருந்தாலும், அவை செப்டம்பரில் தான் பயன்பாட்டிற்கு வரும். வேக்சின் போடாதவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகம் என்பதால், குறைந்தபட்சம் வேக்சின் போட்டவுடன் பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரன்தீப் குலேரியா
ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட சீரோ சர்வேகளில் சிறார்கள் மத்தியில் கொரோனா தடுப்பாற்றல் அதிகளவில் இருப்பதால், பள்ளிகளைச் சுழற்சி முறையில் திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது தெரியவந்தால் பள்ளிகளை மூடிவிடலாம் எனத் தெரிவித்தார்.

சவுமியா சுவாமிநாதன்
உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதனும் இதே கருத்தைத் தான் முன் வைத்துள்ளார். ஆன்லனைல் கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார். மேலும், வீடுகளிலேயே இருப்பதால், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சிறார்களின் மனநலன்
அதேபோல மனநல மருத்துவர்களும் பாதுகாப்பான சூழல் உருவான பிறகு விரைவாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மற்ற குழந்தைகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கி இருப்பது சிறார்களின் மனநலனை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப் படிப்பு முக்கியமானது என்பதால் அதை முறையாகச் சிறார்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பள்ளிகளைத் திறப்பதன் மூலம் குழந்தைகளுக்கு வழக்கமான ஒரு வாழ்க்கையை அளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர், சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிகள் திறப்பு என்பது குழந்தைகளுக்கு மனநலனுக்கு முக்கியமானது என்பது அவர்கள் கருத்து.

பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லை. சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனாலும், இது குழந்தைகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதாலேயே பாதுக்காப்பான சூழல் உருவான பிறகு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். சிறார்களுக்கான வேக்சின் பயன்பாட்டிற்கு வரும் முன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தலாம். இதன் மூலம் சிறார்களுக்கு ஏற்படும் வைரஸ் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி நாம் பள்ளிகளைத் திறந்தால், வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தையும் நாம் பாதுகாக்கலாம்..!












Click it and Unblock the Notifications