பிடி கொடுக்காத எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் அடுத்த மூவ் என்ன? டிசம்பர் 15ல் எடுக்கப்போகும் முடிவு!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகவில்லை என்றே தெரிகிறது. இதன் காரணமாக ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2 வாரங்களுக்கு முன்பாக நடந்த அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க டிசம்பர் 15 வரை கெடு.. அப்படி நடக்கவில்லை என்றால், புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் அதிமுக தொண்டர் உரிமைக் குழுவை அதிமுக தொண்டர் உரிமை கழகமாக மாற்றியும் அறிவித்தார்.

இதனால் தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய கட்சியை தொடங்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்பட்டது. இதனிடையே ஓபிஎஸ் திடீரென டெல்லிக்கு பயணித்து அமித்ஷாவை சந்தித்திருந்தார். இதன்பின் புதியக் கட்சி தொடங்குகிறேன் என்று எப்போது சொன்னேன் என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் விரைவில் அதிமுகவில் ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.
இப்படியான சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் துரோகிகள் என்று மறைமுகமாக விமர்சித்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகளையும் பட்டியலிட்டு பேசி இருந்தார். ஆனால் எந்த இடத்திலும் துரோகிகள் என்று யாரையும் குறிப்பிடவில்லை.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவே அதிமுக தோல்விக்கு காரணம் என்றும் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக புரிந்து கொள்ளப்பட்டது. இதன் மூலமாக அமித்ஷா பேசிய போதும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அதிமுகவில் சேர்க்க பச்சைக் கொடி காட்டவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் சமூக வாக்குகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஓபிஎஸ்-க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்று அவரை சுற்றியுள்ளவர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் ஓபிஎஸ் தரப்பு அமித்ஷாவின் சென்னை பயணம் வரை காத்திருக்க முடிவு எடுத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் முடிவடைந்த பின்னரே, அடுத்தக் கட்ட முடிவு எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகத்திற்கான கொடிகள் மற்றும் இதர தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக்கவும் ஓபிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications