2024ல் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கன்பார்ம்! டெல்லியில் 3 ஷாக் கொடுத்த அமித்ஷா! எடப்பாடிக்கு அதிர்ச்சி!
சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் நிற்பார் என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிப்பதற்காகவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க சென்றார். அது முழுமையாக வெற்றியடைந்ததா என்றால் 50 சதவீதம் என்று சொல்லலாம்.

அதிமுக- பாஜக கூட்டணி உடையாமல் இருக்க சிறிய பேஸ்ட் போட்டு ஒட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்குள் அந்த பேஸ்ட் நழுவில் ஒட்டிய இடம் மேலும் கிழியாமல் இருந்தால் நல்லது. கூட்டணி குறித்து பாஜக மேலிடத்தில்தான் பேசுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தார், தற்போது அதை அமித்ஷாவிடம் உறுதிப்படுத்திவிட்டும் வந்ததாலேயே எடப்பாடி வென்றுவிட்டார் என்றில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை குறித்து கேட்டதற்கு அவர் என்ன சொன்னார், அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அப்படி கேட்டு அவரை பெரியாளாக்காதீர்கள் என்றார்.
இதே எடப்பாடி டெல்லியில் பேட்டி கொடுத்த போது அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை என்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கு அண்ணாமலை வந்ததை டெல்லி போய் பேட்டியில் சொல்கிறார்கள். ஆனால் அந்த தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூட அண்ணாமலை குறித்து எடப்பாடியார் பேசாதது ஏன்?
இருவருக்கும் இடையே உரசல்கள் இருந்தது உண்மைதான். தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்ற முடியாது, நீங்கள் இவருடன்தான் பயணம் செய்ய வேண்டும், இதுவரை அவர் பேசியதை மறந்துவிடுங்கள், இனி அதிமுக குறித்து அவர் எதையும் பேசமாட்டார் என அமித்ஷா, எடப்பாடியிடம் சொல்லி அனுப்பியுள்ளார். அது போல் அண்ணாமலையோ தனித்து போட்டியிடுவோம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா என கூறியிருந்தார். மேலும் அதிமுக ஊழல் பட்டியலை வெளியிட தயார் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட மாட்டார், 2024 இல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என உறுதியாகிவிட்டது.

அப்படியே வெளியிட்டால் அண்ணாமலையை டெபாசிட் கூட வாங்கவிடாமல் அதிமுகவினர் தோற்கடிப்பார்கள். உள்ளடி வேலைகளை செய்வார்கள். அண்ணாமலைக்கு புரிதல் என்ற ஒன்று இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் மூத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருப்பமே இல்லை. ஆனாலும் வேறு வழியில்லை அதனால் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் 2026 இல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி எப்படி வொர்க் அவுட் ஆகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி அலசுவார், பிறகு 2026 இல் சட்டசபை தேர்தலில் ஒரு முடிவு எடுப்பார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 சீட்டுகளை அதாவது 50 சதவீதத்தை ஒதுக்குமாறு அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார். அதாவது 20 சீட்டுகளில் பாமக, தேமுதிக, ஏசிஎஸ் கட்சி, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு நாங்கள் பிரித்து கொடுத்துவிடுகிறோம் என கூறியுள்ளார்.
அத்துடன் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைந்த அதிமுக என்பதை அமித்ஷா வலியறுத்தியுள்ளார். அப்போது ஓபிஎஸ் திமுகவின் பி டீ என தெரிவித்துள்ளார். ஆனால் அமித்ஷாவோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருக்கும் வாக்கு சதவீத வித்தியாசம் 1 சதவீதத்து சொச்சம்தான். ஓபிஎஸ்ஸும் டிடிவி தினகரனும் இணைந்து போட்டியிட்டால் 2 அல்லது 3 சதவீத வாக்குகள் பிரியும். அந்த வாக்குகள் வந்தால் அதிமுகவுக்கு நல்லதுதானே என அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. தொண்டர்களிடம் பேசிவிட்டு சொல்வதாக எடப்பாடி சொல்லிவிட்டார். ஆனாலும் 20 தொகுதிகளை பாஜக கேட்டதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
அண்ணாமலை குறித்து புகார் கூற சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த அதிமுக, 2024 தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் அமித்ஷா பேசியது பெரும் அதிர்ச்சிதான். பாஜக, பாமக, ஆகியவற்றுக்கு தலா 7 இடங்கள், தமாக, கிருஷ்ணசாமி கட்சி, ஏசிஎஸ் கட்சிக்கு தலா 1 இடங்கள் என மொத்தம் 17 இடங்கள் உள்ளது. மீதமுள்ள 3 இடங்களை ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு உள்ஒதுக்கீடாக பாஜக தந்தாலும் தரும். அப்படி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பாஜக சார்பில் எம்பி சீட் கொடுக்கும் போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பார்.
அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதபட்சத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட நிற்பார். இதற்குதான் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் தேனிக்கு பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல மாட்டார். அதிமுக - பாஜக கூட்டணி என்னதான் செலவு செய்து தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களுடைய வெற்றி எண்ணிக்கை குறைவாக இருக்கும், இல்லாவிட்டால் பூஜ்யமாக இருக்கும். இவ்வாறு பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications