எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
சென்னை : இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கை தாண்டி வரும் நிலையில் போதிய ரயில்கள் இயக்கப்படாததும் கூடுதலாக முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படாததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்கள் கூட நெரிசலோடு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றனர் ரயில் பயணிகள்.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது
இந்திய ரயில்வே: அருகருகே இருக்கும் நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களை தவிர தொலைதூரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்யும் அதிவிரைவு வண்டிகள் என தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையும் கூடுதலாக இந்தியாவில் இந்தியன் ரயில்வே சார்பில் சேவையை வழங்கி வருகிறது.
ரயில்களில் கூட்டம்: அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு ஆகியவை இந்திய ரயில்வேக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. 100 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் ஆயிரம் பேர் பயணம் செய்யும் நிலை கூட உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளிலும் ஸ்லீப்பர் பெட்டிகளிலும் மட்டுமே முன்பதிவு இல்லாத பயணிகள் டிக்கெட் எடுக்காத பயணிகள் பயணம் செய்த நிலையில் தற்போது ஏசி கோச்சிகளிலும் முன்பதிவு இல்லாத பயணிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து இருக்கிறது.
ரயில்வேக்கு தலைவலி: மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் ரயில்கள் மற்றும் தொலைதூர ரயில்களில் பயணிகள், ஏசி கோச்சுகளை ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளை ஏறவிடாமலும் இறங்கவிடாமலும் ரயில் பெட்டிகளில் உள்புறமாக தாழ்ப்பாள் இட்டுக் கொள்வது ஏற்கனவே பயணிக்கும் பயணிகளை கும்பலாக சேர்ந்து கொண்டு மிரட்டுவது உள்ளிட்ட செயல்களும் அரங்கேறி வருகின்றன. மாநிலம் விட்டு மாநிலம் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சனையானது உருவெடுத்து இருக்கிறது. இது ரயில்வேக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
முன்பதிவு இல்லா பெட்டிகள்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் ரயில்வே திணறி வருகிறது. அந்தியோதயா போன்ற முன்பதிவு இல்லா ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. மேலும் வைகை எக்ஸ்பிரஸ் பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற தொலைதூர ரயில்களில் இரண்டு அல்லது மூன்று முன்பதிவு இல்லா பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது. எனவே கூடுதலாக முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைப்பதும் அல்லது அதிக அளவில் முன்பதிவில்லாத ரயில்களை இயக்க வேண்டியதும் அவசியம்.
மிகக் கடுமையான பயணம்: கூட்ட நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக பல நேரங்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் கூட கழிவறைக்கு செல்ல முடியாமல் கூட்ட நெரிசலால் சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் காவல்துறையினரும் ரயில்வே போலீசாரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. பொதுவாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு இல்லா பயணிகள் பயணம் செய்தாலும் இவர்களுக்குள் தகராறு ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் அந்தப் பயணம் மிகக் கடுமையான ஒன்றாக மாறிவிடுகிறது.
என்ன காரணம்: இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த பயணமானது பார்க்கப்படுகிறது. எனவே குற்றம் முழுவதும் ரயில்வே துறையின் கீழ் தான் இருக்கிறது. காரணம் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் தனியார் பேருந்துகளில் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை செலவாகும். ஆனால் முன் பதிவில்லா ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும்போது 200லிருந்து 300 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும். ஆகவே பெரும்பாலானவர்களின் தேர்வாக ரயில்வே துறை தான் இருக்கிறது.
தீர்வு தான் என்ன?: அதே நேரத்தில் ஏற்கனவே கூறியபடி போதிய ரயில்கள் இல்லாதது முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றின் காரணமாகவே இந்த பிரச்சனை இருக்கிறது எனவே ரயில்வே துறை கூடுதல் ரயில்களை இயக்குவதும் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகளை இணைப்பதும் தீர்வாக இருக்கும். மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கொடுப்பதும் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவும் என்கின்றனர் பயணிகள்..












Click it and Unblock the Notifications