ஓவியமா.. புகைப்படமா என வியக்க வைத்த திறமைசாலி.. பிரபல ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு
சென்னை: பிரபல ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. இவருக்கு மொத்தம் ஐந்து அண்ணன்கள் மற்றும் 5 அக்காக்கள் உள்ளனர். இவர்தான் அந்த குடும்பத்தின் கடைசி மகன்.
ஓவியத்தின் மீது தீராத காதல் கொண்ட இளையராஜா அதில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு திறமையை மேம்படுத்தினார்.

2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இருந்து இவரது ஓவியங்களுக்கு தனி ரசிகர்கள் உருவாகினர். 2010ஆம் ஆண்டு முதல் இவரது ஓவியங்கள் பிரபல வார இதழில் இடம் பெறத் தொடங்கியது. இதனால் மேலும் புகழ் பெற்றார்.
தமிழக, கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவுக்கு தத்ரூபமாக ஓவியங்களை வரைய கூடிய திறமை பெற்றவர் இளையராஜா. மண்பானையில் சமையல் செய்யும் பெண், கோவில் குளத்தில் கால் நனைக்கும் பெண், பூ கட்டும் பெண் என இவர் வரைந்துள்ள ஓவியங்களைப் பார்க்கும் போது அது புகைப்படமா அல்லது ஓவியமா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு மிக மிக தத்ரூபமாக இருக்கக்கூடியவை.

இப்படியான மிகப்பெரிய திறமைசாலியை கொரோனாவுக்கு இழந்துள்ளோம். தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கடந்த வாரம் கும்பகோணத்துக்கு சென்றுள்ளார் இளையராஜா. ஆனால் சென்னை திரும்பிய அவருக்கு சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் அவர் மருத்துவரிடம் உடலை பரிசோதிக்காமல் மருந்தகங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். நிலைமை மோசமான பிறகு எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார் ஆனால் அதற்குள்ளாக அவரது நுரையீரலில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
எனவே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் இளையராஜா.












Click it and Unblock the Notifications