பேனர் விபத்து.. ஹெல்மெட் அணிந்து இருந்தும் உயிரிழந்தார் இளம் பெண் சுபஸ்ரீ... போலீஸ் தகவல்
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ 22 வயதாகும் இப்பெண் பொறியியல் பட்டதாரி ஆவார். கந்தன் சாவடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எப்போதும் போல் வேலை முடிந்து நேற்று மாலை பள்ளிக்கரணை வழியாக தனது வீடு உள்ள குரோம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அப்போது திடீரென அந்த வழியாக பயங்கர வேகமாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதி ஏறி இறங்கியது.இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தவிபத்து தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ ஹெல்மட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள போலீசார் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்தே சென்றதாகவும் ஆனால் உடல் மீது வாகனம் ஏறிதயால் இறந்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications