சென்னையில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த நபர்.. கீழே இறக்கி, போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள்
சென்னை: சென்னையில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்ட விமானத்தில், எமர்ஜென்சி எக்சிட் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவர் கீழே இறக்கி விடப்பட்டு சென்னை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 168 பேர் பயணிக்க இருந்தனர். நேற்று காலை 11.30 மணிக்கு விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி ஓட தயாரானது.

அப்போது, விமானத்தின் அவசர கால கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றார். விமானத்தின் அவசர கால கதவைத் திறக்கப்பட்டதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. அதன் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் (45) என்பவர் கதவை திறக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி உடனடியாக தகவல் கொடுத்தார். உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி லக்ஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவசர கால கதவை தெரியாமல் நடந்துவிட்டதாக லட்சுமணன் கூறியுள்ளார்.
தான் அவசரகால கதவை திறக்க முயற்சிக்கவில்லை என்றும், கதவின் பட்டன் மீது இருந்த பாலித்தீனை அகற்ற முன்றபோது அலாரம் அடித்து விட்டதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த விமான நிறுவன அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.
பின்னர், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் அரை மணி நேர தாமதத்திற்குப்பின் இலங்கை புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. லக்ஷ்மணிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications