சிறப்பு ரயிலில் சென்னை வந்த பயணிகள்.. எத்தனை பேருக்கு காயம்? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
சென்னை: ஒடிசாவில் இருந்து வரும் தமிழக பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் 8 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம்( வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த போது ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி சின்னாபின்னமாகின. ஒன்றன் மீது ஒன்று ஏறி பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தது.
விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். இந்த கோர விபத்தில் விபத்தில், இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 803- காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
எனினும், அனைவரும் குணம் அடைந்து நலம் பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று ஒடிசாவில் முகாமிட்டு உள்ள அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக குழு தெரிவித்துள்ளது. எனினும் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர்.
ஒடிசாவின் பதாராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட இந்த ரயிலில் 137 தமிழ்நாட்டு பயணிகள் அதிகாலை சென்னை திரும்பினர். சென்னை வந்த பயணிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர். ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்க 4 மருத்துவமனைகள் தயார் நிலைகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியதாவது:- ஒடிசாவில் இருந்து வரும் தமிழக பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் முதலில் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்த பிறகு பாதிப்பு இருந்தால் அங்கே அட்மிட் பண்ணி சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு பெரும்பாலும் எலும்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கை கால்கள் ஆகியவற்றில் காயங்கள் உள்ளது. எலும்பு முறிவு இருப்பது போல தெரியவில்லை. 1,2 நாட்களில் சிகிச்சை முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications