சென்னை சாலையில் கிடந்த "ஏகே 47.." ராமாவரம் பிரதான சாலையில் பரபரப்பு! என்ன நடந்தது! வெளியான தகவல்
சென்னை: சென்னை ராமாவரம் பகுதியில் சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கியின் பாகம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நவீனத் துப்பாக்கி எப்படி அங்கே வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் துப்பாக்கிக்கான சட்டங்கள் மிகக் கடுமையாகவே இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல நமது நாட்டில் அவ்வளவு எளிதாகத் துப்பாக்கிகளை வாங்கிவிட முடியாது.

சாதாரண கைத்துப்பாக்கியை வாங்கவே நமது நாட்டில் 1008 கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஒவ்வொரு துப்பாக்கி குண்டிற்கும் கணக்குக் காட்ட வேண்டிய சூழலே இருக்கிறது.
துப்பாக்கி:
சென்னை ராமாவரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்குள்ள சிக்னல் அருகே இன்று மதியம் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியின் பாகம் கிடந்துள்ளது. அத்துடன் ஒரு கவரில் அதற்கான துப்பாக்கி குண்டுகளும் இருந்துள்ளது. இதை அப்பகுதியில் சென்ற சுவராஜ் என்பவரே முதலில் பார்த்துள்ளார். உடனடியாக அதை எடுத்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய போலீசார், சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ராமபுரத்தில் பிரதான சாலையில் துப்பாக்கியின் பாகமும் குண்டுகளும் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதலில் அது ஒர்ஜினல் துப்பாக்கி தானா.. இல்லை சினிமா ஷூட்டிங் துப்பாக்கியா என்பது குறித்து ஆய்வு செய்தனர். முதற்கட்ட ஆய்வில் அது நிஜத் துப்பாக்கி எனத் தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை:
இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஏகே 47 ரக துப்பாக்கி அங்கு எப்படி வந்தது, யாராவது திட்டமிட்டு அங்குப் போட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். மேலும், அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
யாருடைய துப்பாக்கி:
இதற்கிடையே ராஜ்பவனுக்கு பாதுகாப்பிற்குச் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவரே துப்பாக்கியின் பாகத்தையும் குண்டையும் தவறவிட்டது தெரிய வந்தது. துப்பாக்கியின் பாகம் கண்டெடுக்கப்பட்ட குறித்த தகவல் கிடைத்தவுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள், ராமாவரம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் துப்பாக்கியின் பாகத்தையும் குண்டுகளையும் ஒப்படைத்தனர்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ராமாவரத்தில் பிரதான சாலையில் திடீரென ஏகே 47 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications