தங்க நகையை அடமானம் வைக்க போறீங்களா? சென்னையில் சைலண்ட்டாக வந்த புது "செக்"! நகையை மீட்க முடியாதா?
சென்னை: சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் முதல் சிறு தொழிலதிபர்கள் வரை அனைவரின் உடனடி பணத்தேவைக்கு முதல் உதவியாக இருப்பது தங்க நகைக்கடன் என்றே சொல்லலாம்.. விவசாயம், மருத்துவம், திருமணம் என எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும் கைகொடுக்கும் இந்த நகைக்கடன்களில் பொதிந்துள்ள லாபங்கள் மற்றும் பலருக்கும் தெரியாத ஆபத்துகள் குறித்து நிதி ஆலோசகர்கள் சில அதிரடி தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அதனை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..
வங்கிகளில் நகைக்கடன் பெறுவது மற்ற கடன்களை விட மிக எளிதானது. தனிநபர் கடன் போல இதற்கு அதிகப்படியான வருமான சான்றோ அல்லது ஐடி ரிட்டர்ன்ஸ் விவரங்களோ தேவையில்லை. உங்கள் கையில் இருக்கும் தங்கமே மிகப்பெரிய ஜாமீன்தான்..

நகைக்கடன் பயன்கள்
குறிப்பாக, சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவு. தனியார் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, வங்கிகளில் நகைகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதோடு, வட்டி சுமையும் குறைகிறது.
பல வங்கிகள் அசலைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கி, மாதந்தோறும் வட்டியை மட்டும் கட்டும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றன. நிலம் அல்லது வீடு போன்ற சொத்துக்களை அடமானம் வைப்பதை விட, நகைகளை அடமானம் வைக்கும்போது காகித வேலைகள் மிகக் குறைவு என்பதே இதன் மிகப்பெரிய பலம்.
மறைந்திருக்கும் ஆபத்துகள் - ஏலத்திற்கு வரும் நகைகள்
நகைக்கடனில் உள்ள மிகப்பெரிய சவாலே அதன் திருப்பி செலுத்தும் காலம் தான். "எளிதாகப் பணம் கிடைக்கிறது" என்பதற்காகத் தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவது பின்னாளில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். நீங்கள் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் செலுத்தத் தவறினால், வங்கிகள் எந்த முன்னறிவிப்புமின்றி அதாவது லாஸ்ட் வார்னிங்குக்கு பிறகு உங்கள் நகைகளை பொது ஏலத்தில் விட்டுவிடும். இது குடும்பத்தின் கௌரவத்தைச் சிதைப்பதோடு, பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்தும்.
மேலும், சில தனியார் நிதி நிறுவனங்களில் "மறைமுகக் கட்டணங்கள்" வசூலிக்கப்படலாம். கடனை திருப்பி செலுத்தும்போது வட்டிக்கு வட்டி என தொகை மலைபோல் உயர்ந்து நிற்பதை அப்போதுதான் பலரும் உணர்கிறார்கள்.
நகை மதிப்பீட்டில் உள்ள நுணுக்கங்கள்
தங்கத்தின் தற்போதைய சந்தை விலையில் 75% வரை மட்டுமே கடனாக பெற முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறை உள்ளது. உங்கள் நகையில் உள்ள கற்களின் எடை கழிக்கப்பட்டு, சுத்தமான தங்கத்தின் எடைக்கு மட்டுமே பணம் வழங்கப்படும். இதனால் நீங்கள் எதிர்பார்த்த முழுத் தொகையும் கிடைக்காமல் போகலாம்.
மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் போது, சில வங்கிகள் கூடுதல் தொகையை உடனடியாகச் செலுத்தக் கோரும் வாய்ப்பும் உள்ளது. இதை உணராமல் கடன் வாங்குவது ஆபத்தானது.
நிபுணர்களின் முக்கிய அறிவுரை
எனவே, நகை அடமானம் வைக்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.. குறிப்பாக முதலில் வங்கியின் வட்டி விகிதம், கடன் காலம், அபராத கட்டணங்கள் ஆகியவற்றை தெளிவாக கேட்டறிய வேண்டும். நகையை பாதுகாப்பாக வைத்திருப்பார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு உங்கள் அடையாள சான்றாக ஆதார், பான் கார்டு மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, அந்த நகையை மீட்கும் வருமான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே அடமானம் வைக்க வேண்டும்.
அவசரத்தேவைக்கு நகையை அடமானம் வைப்பது புத்திசாலித்தனம், ஆனால் முறையான திட்டமிடல் இல்லாமல் வைப்பது உங்கள் சேமிப்பையே இழக்கச் செய்துவிடும் என்று அட்வைஸ் தருகிறார்கள் நிபுணர்கள்...!!












Click it and Unblock the Notifications