“ஜெயலலிதா உடன் பழகியது எனது கௌரவம்”.. பிரதமர் நரேந்திர மோடி சொன்ன வார்த்தை! மாறும் கூட்டணி கணக்கு?
சென்னை: "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா, எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது பாக்கியம்" என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி கடந்த 2023 ஆம் ஆண்டு பிளவுற்ற நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளை அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெயலலிதா பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்." எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார்.
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் காட்டமாக பதிலடி கொடுத்தனர். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதனைத் தொடர்ந்து, கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனி அணியாகவும், பாஜக தனி கூட்டணியாகவும் போட்டியிட்டு, தோல்வி அடைந்தன.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனினும், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே கூறி வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் களத்தில் ஜெயலலிதா பிறந்தநாளன்று பாஜக தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications