ஆந்திரா, ஒடிசா செல்லும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா! ப. சிதம்பரம் தாக்கு
சென்னை: மணிப்பூரில் ஓராண்டிற்கு மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், அங்குச் செல்ல பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையா என்று முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

மோடி: நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். அவருடன் என்டிஏ கூட்டணியில் இருக்கும் 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். என்டிஏ கூட்டணி அரசில் பாஜகவில் இருந்து 61 பேர் உள்ளனர். தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு கட்சிக்கு இரண்டு இடங்கள் தரப்பட்டுள்ள நிலையில், மற்ற ஏழு கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல்கள் நடந்த நிலையில், அதில் ஒடிசாவில் பாஜகவும் ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் வென்றன. ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி, ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கும் நிலையில், இரண்டு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
ப. சிதம்பரம் தாக்கு: இதற்கிடையே இதைக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம், வன்முறை தொடரும் மணிப்பூர் செல்ல மட்டும் பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை எனச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜூன் 12 முதல் ஜூன் 14 வரையிலான நாட்களில் பிரதமர் மோடி, ஆந்திரா மற்றும் ஒடிசா முதல்வர்கள் பதவியேற்பு விழா மற்றும் ஜி-7 கூட்டத்திற்காக இத்தாலிக்குச் செல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மேலும், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் மோடி வாரணாசிக்குச் செல்வார் என கூறப்படுகிறது.. இதெல்லாம் நல்லதுதான், ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நரேந்திர மோடி எப்போது வருவார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை: கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதலே மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு பிரிவினர் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் சென்ற கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் தலைவர்: மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட மணிப்பூர் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மணிப்பூர் மோதலை தீர்க்க வேண்டியது அவசியம்.. ஓராண்டுக்கு மேலாக அங்கு வன்முறை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் அமைதியாக இருந்தது.. ஆனால் திடீரென அங்கே துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. தேர்தலைத் தாண்டி மணிப்பூர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications