ஜூலை 11-லேயே எடப்பாடிக்கு வாழ்த்து கூறினோம்.. அந்த வாழ்த்து இப்போதும் செல்லும்.. அன்புமணி ராமதாஸ்!
ஜூலை 11ல் பாமக கூறிய வாழ்த்து, இப்போதும் செல்லும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தபோதே பாமக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டோம் என்றும், அந்த வாழ்த்துகள் இப்போதும் செல்லும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
இதன் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. அதிமுகவின் ஒரே முகமாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார். இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் விரைவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கருத்து
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு பற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். பாமகவின் நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

வாழ்த்து செல்லும்
அதன் பின்னர் அதிமுக வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்த போதே வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டோம். அந்த வாழ்த்துகள் இப்போதும் செல்லும் என்று கூறினார்.

அதிமுக - பாமக கூட்டணி?
சில மாதங்களுக்கு முன் நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், அதிமுக நான்காக பிரிந்துவிட்டதாக விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக - பாமக இடையில் சில உரசல்கள் நேரிட்டது. அதன் பின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்ததோடு, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications