நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் ***வெட்டிவிடுவேன்.. பயந்து சாகனும்.. அன்புமணி ஆவேசம்
சென்னை: தாம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் 'ஆணுறுப்புகளை' வெட்டி எடுத்துவிடுவேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்து பேசியது பேசுபொருளாகி இருக்கிறது.
திருத்தணி அருகே நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: 18 ஆண்டுகளாக வேளாண் நிதி நிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வருகிறது. விவசாயிகளுக்கும் விவசாய முன்னேற்றத்துக்கும் என்ன என்ன தேவைகள் என்பதை மாநில அரசு வெளியிடுவதற்கு முன்னரே வேளாண் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

பாமக தொடர்ந்து வலியுறுத்தியதால்தான் தமிழ்நாடு அரசு முதல் முறையாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் நிதிநிலை அறிக்கையை தனியாக தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் 65% விழுக்காடு மக்கள் விவசாயிகள்- விவசாயம் சார்ந்தவர்கள்; நான் படித்தது மருத்துவம்தான்.. ஆனால் அடிப்படையில் ஒரு விவசாயிதான்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை; தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விவசாயத் துறைக்கு ரூ.14,500 கோடிதான் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இன்று பாமக வெளியிட்டிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் பாமக இன்று ஆளும் கட்சியாக இருந்தால் விவாசயத்துறைக்கு ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும்.
தமிழ்நாட்டில் இன்று சட்டமும் இல்லை.. ஒழுங்கும் இல்லை. பெண்கள் தனியாக எங்கேயும் பாதுகாப்பாக செல்லவே முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனைத்தான் நாள்தோறும் செய்தித்தாள்களில் பார்த்து கொண்டிருக்கிறோம்.
5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது.. அந்த மிருகத்தை நாம் என்ன செய்யலாம்? பொதுமக்கள் சொல்வது போல கொன்றுவிட வேண்டும்.. அவ்வளவு கோபம்.. அவ்வளவு ஆத்திரம் வருகிறது. 8 பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்; 7 பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை பலாத்காரம் செய்கின்றனர். இது பீகார், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என நினைக்கிறோம்.. ஆனால் நம் தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கிறது. இதை எல்லாம் நடக்க விடனுமா? நடக்க விடமுடியுமா?
இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை.. நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால்.. இவனுகளை (பாலியல் குற்றவாளிகளை) வேற மாதிரி பண்ணிவிடுவோம்.. (ஆணுறுப்புகள)... வெட்டி விடுவோம்.. எவன் செய்கிறானோ அவன்..... (ஆணுறுப்பை) வெட்டி விட வேண்டும்.. அதற்குப் பின்னர் இப்படி எவனாவது செய்வானா? அய்யய்யோ இந்த ஆட்சியில் வெட்டி விடுவாங்க என்ற பயம் இருக்கும். ஆனால் இப்ப பயமே இல்லை.. இதற்கு காரணம் கஞ்சா, போதை மாத்திரை, டாஸ்மாக் மதுபானம்தான். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications