பாஜக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக! ஓபிஎஸ், டிடிவியை காக்க வைத்தது இதற்கு தானா?
சென்னை: பாஜக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக வரலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி அதுதான். பலர் நாங்கள்தான் 2வது கட்சி எனச் சொன்னாலும் அதிகாரப்பூர்வமாகச் சட்டசபையில் அதிமுகதான் எதிர்க்கட்சி.

ஆகவே அதிக பிரதிநிதித்துவ அடிப்படையில் மக்களையில் அதிமுகவின் குரல் ஒலிக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. ஒரு சீட்டும் வெற்றி பெறாத தேமுதிகவுக்கு ஏன் மாநிலங்களவைப் பதவியை அதிமுக விட்டுத்தர வேண்டும் என அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிக்குள் ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.
அதிமுக 2024 மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் நிற்பதற்கு முடிவெடுத்துள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 சீட்டுகளும் பாமகவுக்கு 7 சீட்டுகளும் ஒதுக்கப் படலாம் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணிக்குள் ஐக்கியமாக உள்ள இந்த இரண்டு கட்சிகளும் ராஜ்ய சபா சீட்டு என்பதில் உறுதியாக உள்ளன. இதனால்தான் அதிமுக தலைமைக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதற்குக் காரணம், கடந்த முறை ஜி.கே.வாசனுக்குக் கொடுத்தார்கள். அதற்கு முன் பாமகவுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கட்சிகள் மக்களைச் சந்தித்து பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை பெறாமலேயே அதிமுகவின் உதவியால் மாநிலங்களைவைப் பதவியை அனுபவித்து வருகின்றன.
அதிமுக ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா சீட்டு கொடுத்து. ஆனால் அவர் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக பக்கம் போகிறார். அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை.

அதிமுகவின் 'மூவ்' என்பது 2026 சட்ட மன்றத் தேர்தலை மனதில் கொண்டே இருந்து வருகிறது. என்னதான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிரேமலதா விஜயகாந்த் வீடு தேடிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தாலும், இறுதிக் கட்டத்தில் பாஜக பக்கம்தான் தேமுதிக போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதே மனநிலையில் தான் பாமகவும் உள்ளது. பாஜக அணியுடன் போவதால், இந்தக் கட்சிகளுக்கு ராஜ்ய சபா சீட்டு உறுதியாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அன்புமணிக்கு அமைச்சரவையில் கூட இடம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தேர்தல் வெற்றிக்குப் பின் இந்தக் கட்சிகள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்படலாம். ஆகவே தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சித் தலைமைகளுக்கு அந்த அச்சம் கூடவே அதிகமாக உள்ளது என்கிறார்கள்.
அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு சரியாக நடக்காத பட்சத்தில் பாமகவும் தேமுதிகவும் பாஜக பக்கம் வரும் என்று நயினார் நாகேந்திரன் அடித்துக் கூறியுள்ளார்.

பாமகவும் தேமுதிகவும் நேரடியாக டெல்லி தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இங்கே பாஜக மாநிலத் தலைமைக்கு என்று ஒரு குழு போடப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் குழுவை பாமகவும் தேமுதிகவும் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை.

இன்னும் சொல்லப்போனால், மாநில அளவில் தேர்தல் கூட்டணி குறித்து அமைக்கப்பட்டுள்ள பாஜக குழுவில் மாநிலத் தலைவர் அண்ணாமலையே போடப்படவில்லை. பாஜக தலைமையே அண்ணாமலை கூட்டணி பேச்சிலிருந்தால் சங்கடங்கள் வரும் என உறுதியாக நம்பித்தான் அவரை குழுவில் சேர்க்காமல் தவிர்த்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் 2014இல் அதிமுக திமுக ஆதரவு இல்லாமலே பாமக சார்பில் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வென்று பெற்றுள்ளார்.

அதைப்போன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெல்ல முடியும் என சில பாமக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடமும் அன்புமணியிடமும் சொல்லி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
பாமக அன்புமணி நேரடியாக அமித்ஷாவுடன் தொடர்பில் உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் நேரடியாக அமித்ஷாவே தொலைப்பேசியில் பேசிவருகிறார் என்கிறது டெல்லி வட்டார செய்தி.
அதிமுக அணியில் தேமுதிக 4 தொகுதிகளைக் கேட்பதாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் கேட்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பாமகவின் வரவுக்காகத்தான் அதிகம் காத்திருக்கிறார். அவர்கள் வரும்வரை தேமுதிகவுக்குத் தொகுதிகளை ஒதுக்க முடியாது.

தேமுதிக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் நிற்க விரும்புவதாகப் பட்டியல் அதிமுகவிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்தத் தொகுதிகள் பாமகவும் பலமாக உள்ளது. ஆகவே, தேமுதிக மற்றும் பாமக இடையே அதிமுக கூட்டணிக்குள் ஒரு மோதல் வரலாம் என்கிறார்கள். அதைத்தான் நயினார் நாகேந்திரனும் நாசூக்காகப் பேசி இருக்கிறார்.

இதற்கிடையே பிரதமர் மோடி தமிழ்நாட்டை மையமாக வைத்து வட்டமடித்து வருகிறார். அவரது வருகை தேர்தலையொட்டி அதிகம் உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் வருவதற்கு முன் மோடி இதே பாணியைத்தான் கடைப்பிடித்தார்.
ஆக, அடிக்கடி மோடி தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைப்பதன் மூலம் பாஜக வலையில் பாமக மற்றும் தேமுதிக விழலாம் என்கிறார்கள். அந்த இரண்டு கட்சிகளை இழுக்காமல் போனால் ஆட்சியில் உள்ள மோடிக்கு அது கெளரவ பிரச்சனையாகப் போய்விடும்.

ஆக, முதலில் இந்த பாமக, தேமுதிகவை வளைத்துப் போட்ட பிறகே ஒபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற 'இனிஷியல்' புள்ளிகளை பாஜகவுக்கு இணைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காகவே ஒபிஎஸ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications