கசப்பு மறந்து கையை பிடித்த அன்புமணி.. விஜயகாந்த் வீட்டில் உருக்கம்! சிரித்தபடியே பார்த்த பிரேமலதா!
சென்னை: பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அன்புமணி ராமதாஸ் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்தார்.
Recommended Video
கடந்த மே 28ம் தேதி பாமக சிறப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். ஜிகே மணி தலைவராக இருந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தை பிடித்துள்ளார்.
இதையடுத்து தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களை, அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

ஸ்டாலின்
முதலில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார். அதன்பின் அதிமுக தலைவர்கள் பலரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார். பின்னர் ஆளுநர் ஆர். என் ரவியையும் மரியாதை நிமித்தமாக அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். இந்த வரிசையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரின் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

அன்புமணி
விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. திடீரென அன்புமணி ராமதாஸ் விஜயகாந்த் வீட்டிற்கு வந்தது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் கையை பிடித்து. அவரின் அருகில் சென்று அன்புமணி பேசினார். அதோடு அவருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செய்தார். பிரேமலதா விஜயகாந்த் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

சந்திப்பு
முகம் முழுக்க சிரிப்போடு அன்புமணியை பிரேமலதா வரவேற்றார். இதற்கு முன் 2019ல் லோக்சபா தேர்தலில் பாமக - தேமுதிக ஆகியவை அதிமுக கூட்டணியில் இருந்த போது, அன்புமணி ராமதாஸ் நேரடியாக சென்று விஜயகாந்தை அவரின் வீட்டில் சந்தித்தார். ஆனால் அதன்பின் இரண்டு தரப்பிற்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முக்கியமாக சட்டசபை தேர்தலில் அதிமுகவிடம் இடம் கேட்பதில் இரண்டு கட்சிக்கும் போட்டி நிலவியது.

கசப்பு இல்லை
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக கேட்ட இடங்களை விட தேமுதிக கூடுதல் இடங்களை கேட்டது. அப்போது அதிமுக - தேமுதிக கூட்டணி உடைய பாமக - அதிமுக நெருக்கம் முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டது. இதனால் பாமக - தேமுதிக இடையே கடும் மோதல், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் இரண்டு கட்சி தலைவர்களும் எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் 3 ஆண்டுகளுக்கு பின் பாமக தலைவர் ஆனதும் அன்புமணி ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் அன்பாக பேசிக்கொண்டது, இரண்டு கட்சியினர் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications