அங்கேயும் போகலை.. எங்கேயும் போகலை.. இங்கேயேதான்.. "இலை"யோடுதான்.. அடித்து சொன்ன ராமதாஸ்!
6 மாதம் கழித்துதான் கூட்டணி பேச்சு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை: இப்படியா... அப்படியா.. இங்கேயே.. அங்கேயே.. என்று பாமக வைக்க போகும் கூட்டணி குறித்து பரபரவென பேசப்பட்ட நிலையில், டாக்டர் ராமதாஸ் எல்லா வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. "அதிமுகவுடன் கூட்டணி தொடரும்" என்று திட்டவட்டமாக சொன்னதுடன், ரஜினி தரப்பையும் கிறுகிறுக்க வைத்து வருகிறார்!
அதிமுக - பாமக கூட்டணி அமைதியாக போய் கொண்டுள்ளது.. திடீரென ஒருநாள் தமிழருவி மணியன் தன் பேட்டியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்றார்.. அத்துடன் நிற்காமல் பாமக ரஜினியுடன் சேரும் என்றார்!
இதுதான் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.. விவாத பொருளாக மாறியது.. யூகங்களை கிளப்பி விட்டது.. கூடவே வதந்திகளும் பெருகியது.. இதற்கெல்லாம் முக்கிய காரணம் தமிழருவி மணியன் சொன்ன கருத்து மட்டுமல்ல.. இதனை டாக்டர் ஐயாவும் உறுதியாக மறுக்காமல் இருந்ததும்தான்!

ரஜினிகாந்த்
இந்நிலையில்தான் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. ஒரு அறிவிப்பும் இல்லை.. அரசியல் சம்பந்தமான வெளியீடு இல்லை.. ஆகஸ்ட் 15-ல் கட்சி ஆரம்பிக்க போவதாக ஒரு தகவல் சொல்கிறார்கள்.. வழக்கமாக இதையும் நாம் நம்ப தயாராக இல்லை என்பது வேறுவிஷயம்.. கூட்டணி குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி பற்றியே ரஜினிகாந்த் சொல்லாதது பாமக தரப்புக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதா என்றுகூட உறுதியாக தெரியவில்லை.

கூட்டணி
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசினார்.. அப்போது, "தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமகவை பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.. தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இப்போது கேட்க வேண்டாம்... தேர்தலுக்கு 6 மாசத்தக்கு முன்னாடிதான் பொதுவாக கூட்டணி குறித்து பேசுவார்கள். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம்.. தற்போதும் பாமக கூட்டணியில் தொடர்கிறது.. தொடருவோம்... தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நல்ல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்" என்றார்.

வட மாவட்டம்
ரஜினிகாந்த் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த கேள்விக்கு, பதில் அளிக்க டாகடர் ஐயா மறுத்துவிட்டார். எனினும் அதிமுக தரப்பில் இது உற்சாகத்தையே தந்துள்ளது.. இதற்கு காரணம், தமிழக அரசியல்களத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்துவருவது பாமகதான்.. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் இருக்கும் தொகுதிகளில் பாமக இருக்கும் கூட்டணியே வெற்றி கூட்டணியாக கருதப்படும்.. இப்போதும் அப்படிதான் கருதப்படுகிறது.

பிளான்கள்
இதை கடந்த உள்ளாட்சி தேர்தல்வரை நிரூபணமும் ஆகியுள்ளது.. அதனால்தான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், பாமகவை எடுத்த எடுப்பிலேயே உள்ளே இழுத்து கொள்ள முயற்சிப்பதாக முதலில் தகவல் வந்தது. அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, தற்போது பெரும் தலைவலியாக இருந்து வருவது திமுகவின் எழுச்சிதான்.. அதனால்தான் பல்வேறு பிளான்களை அதிரடியாக இறக்கி வருகிறார் எடப்பாடியார்... இந்த சமயத்தில் திடீரென ரஜினி - ராமதாஸ் என்று கூட்டணி பெயர் அடிபடவும் நிச்சயம் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது.

தெளிவு
வன்னியர் வாக்குகளை அள்ளுவதற்காக திமுகவுக்கு அங்கே வேல்முருகன் இருக்கும்போது, டாக்டர் ராமதாஸ் ரஜினியுடன் சேருவாரோ என்ற ஐயமும் அதிமுக தொண்டர்களிடமும் லேசாக எழத்தான் செய்தது. தற்போது இந்த சர்ச்சை, யூகங்களை டாக்டர் ராமதாஸ் மிக அழகாக தெளிவுபடுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல், உறுதி அளித்தபடி அன்புமணியை ராஜ்யசபா உறுப்பினராக்கிய அதிமுகவுக்கு, கூட்டணி சார்பில் தெரிவிக்கும் ஒரு பதில் மரியாதையே இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆக அதிமுக - பாமக தெளிவாகிவிட்டது.. ஆனால் எதற்காக தமிழருவி மணியன் அன்று அப்படி சொன்னார் என்றுதான் இதுவரை புரியவே இல்லை!












Click it and Unblock the Notifications