பாமக பஞ்சாயத்து.. அப்பா மகன் சேர்வார்கள்! கட்சியை குறிவைக்கும் கைக்கூலிகள்! தங்கர் பச்சான் சுளீர்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவர் அன்புமணி ராமதாஸ், நிறுவனர் ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வரும் நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாமகவுக்கு தொடர்பு இல்லாதவர்கள் கூட பாமக மீது மிகுந்த அக்கறையோடு இருப்பதாக கருத்து சொல்லி வருவதாக விமர்சித்துள்ளார் பிரபல இயக்குனர் தங்கர் பச்சான்.
பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ் மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.
கட்சியின் நிகழ்ச்சிகளில் அன்புமணி ராமதாஸை நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் ராமதாஸ் விமர்சித்து பேசினார். உச்சபட்ச மோதலாக பல லட்சம் பேர் திரண்டு இருந்த வன்னியர் சங்க மாநாட்டில் கட்சிக்குள் கூட்டணி வேண்டாம்.. இங்கே நடக்காது தம்பி என ராமதாஸ் பேசியது, சொந்த கட்சி நிர்வாகிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது குடும்ப விவகாரங்களை பொதுவெளியில் பேசி அதிர வைத்தார் ராமதாஸ். மேலும் பாமக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் அனைவரும் பதவியில் தொடர்வதாக மறு அறிவிப்பு வெளியிட்டார் அன்புமணி.
தற்போது மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி ராமதாஸ் நடத்திவரும் நிலையில் அன்பு மணிக்கு ஆதரவாக இருக்கும் மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சதாசிவத்தை நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும் அவருக்கு பதிலாக ராஜேந்திரனை மாவட்ட செயலாளராக நியமனம் செய்தார். சதாசிவம் தற்போது மேட்டூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தீவிர அன்புமணி ஆதரவு நிலைப்பாட்டில் சதாசிவம் இருப்பதால் ராமதாஸ் அவரை நீக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாமக ஒன்று சேர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் விவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாமகவுக்கு தொடர்பு இல்லாதவர்கள் கூட பாமக மீது மிகுந்த அக்கறையோடு இருப்பதாக கருத்து சொல்லி வருவதாக விமர்சித்துள்ளார் பிரபல இயக்குனர் தங்கர் பச்சான். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," பாமகவிற்கு தொடர்பு இல்லாதவர்கள் கூட சமூக வலைத்தளங்களில் பாமக மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவர்களெல்லாம் பாமகவினரும் அல்ல, பாமக மீது அக்கறைக் கொண்டவர்களும் அல்ல எதிரிகளின் கைக்கூலிகள்!
அவர்களுக்கெல்லாம் பதில் அளித்து நேரத்தை வீணாக்காதீர்கள்! சமூக வலைத்தளங்கள் இப்பொழுது மனநோயாளிகளின் கூடாரமாகவும், வேலையற்ற, பண்பற்றவர்களின் இருப்பிடமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
பாமக இயக்கத்தை எவரும் பலவீனப்படுத்த முடியாது! பலவீனப்படுத்த முயல்பவர்கள் தேர்தல் முடிவுக்குப்பின் காணாமல் போய்விடுவார்கள்! கட்சியிலிருந்து முந்தைய காலங்களில் வெளியேறிபவர்கள் கூட, சூழ்ச்சியாளர்கள் கட்சியை திட்டமிட்டு அழிக்க முயல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்பொழுது இயக்கத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்! கட்சியை வலுப்படுத்தி பாதுகாத்து தேர்தலின் மூலம் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் முக்கியத்துவத்தை அனைவரும் உணர தொடங்கிவிட்டனர் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications