எல்லாம் அப்பாவுக்காக.. இறங்கி வந்த அன்புமணி! விட்டுக் கொடுக்காத ராமதாஸ்.. கெட்டுப் போகும் மாம்பழம்?
சென்னை: பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என அக்கட்சியினர் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்துவது போல அன்புமணி ராமதாஸ் தந்தையிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். ஆனால் அதற்கு பதில் அளிக்காத ராமதாஸ், தொடர்ந்து மாவட்ட செயலாளர்களையும், தலைவர்களையும் நீக்கி, புதிதாக நியமித்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் நடக்கிறது பாமகவில் என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது..
தமிழக அரசியல் கட்சிகளின் பாமக சற்று வித்தியாசமானது. அப்போதைய சூழலில் திமுக, அதிமுக தமிழகம் முழுவதும் தெரிந்த பிரபலங்களால் உருவாக்கப்பட்டது. திமுகவை அண்ணாவும், அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினர்.
திமுகவிலிருந்து விலகிய வைகோ மதிமுகவை உருவாக்கினார். ஆனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து மருத்துவரான ராமதாஸ் வன்னியர் சங்கத்தை துவக்கினார். அதற்கு பிறகு தான் அது பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது.

பாமக மோதல்
இதுவரை ஏராளமானவரை சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி உள்ளது பாமக. ஆனால் இதுவரை கட்சியின் நிறுவனரான ராமதாஸ் ஒரு கவுன்சிலர் பதவியை கூட வகித்ததில்லை. இந்த நிலையில் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனது மகனை அரசியலில் களம் இறக்கினார். அன்புமணி ராமதாஸ் எம்பி ஆனதோடு மத்திய அமைச்சராகவும் பதவி ஏற்றார். தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்ட நிலையில், வளர்ச்சி பாதையை நோக்கி பாமக பயணிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 2026 தேர்தலுக்கு முன்னதாக அந்த கட்சியில் பல பிரச்சினைகள் முளைத்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
தந்தை மகன் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் பாமக நிர்வாகிகள். 2026 தேர்தலை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என பெரிய கட்சிகளும் சிறிய கட்சிகளும் களப்பணியாற்றி வரும் நிலையில், பாமகவும் அதற்கேற்றார் போல் வன்னியர் சங்க மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது. ஆனால் அதில் திருஷ்டி விழுந்தது போல மாநாட்டில் ராமதாஸ் பேசியது பாமக நிர்வாகிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ராமதாஸ்
அதற்கு முன்னதாகவே அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து செயல் தலைவராக பதவி இறக்கம் செய்தார் ராமதாஸ். ஆனால் பொதுக்குழு முடிவின்படி நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். இதனால் கட்சியில் இரு அணிகள் உருவாகி இருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் விலக்குவதும், அவர்களை அன்புமணி சேர்ப்பதுமாக தொடர்ந்து சில நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் அன்புமணி ராமதாஸ் பக்கம் நிற்கும் நிலையில் அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார் ராமதாஸ்.
பாமக குழப்பம்
ஆனால் அவர்களே பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிவித்தார். அதற்குப் பிறகு திண்டுக்கல், தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் செயலாளர்களையும் தலைவர்களையும் நீக்கினார் ராமதாஸ். அந்த வகையில் நேற்று 18 புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, தலைவர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதனால் உற்சாகமடைந்திருக்கும் அவர்கள் பொது குழுவை கூட்டி வருகின்றனர்.
பாமக பொதுக்குழு
வட மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். கட்சி தொடர்பாக எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் - அன்புமணியை சமாதானம் செய்ய சில நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். அதன் வெளிப்பாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பொது குழுவில் அன்புமணி தந்தை ராமதாஸிடம் நேரடியாகவே மன்னிப்பு கேட்டார்.
ராமதாஸ் பிடிவாதம்
உத்தரவிடுங்கள் தலைவராக அதை செய்து முடிக்கிறேன் எனவும் கூறினார். ஆனால் ராமதாஸ் விடாப்பிடியாக ஏற்கனவே இருக்கும் தலைவர்களையும் மாவட்ட செயலாளர்களின் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இது குறித்து கேட்டபோது பாமக நிர்வாகிகள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். "கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என்பது ராமதாசுக்கு நன்றாக தெரியும். ஆனால் தான் இருக்கும் வரை கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என விரும்புகிறார் ராமதாஸ்.
நிர்வாகிகள் நீக்கம்
வன்னியர் சங்கத்திலிருந்து பாமகவாக உருவாக்கி அரசியல்படுத்திய தன்னை மகன் மதிக்கவில்லையோ என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில் அன்புமணி தந்தை மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அதனால் தான் பொதுக்கூட்டத்திலேயே வெளிப்படையாக மன்னிப்பு கூறினார். ஆனால் அதற்கு ராமதாஸ் பதில் கூட சொல்லவில்லை. மேலும் அன்பு மணியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற குணம் அவருக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல ராமராஸுக்கு இயற்கையாகவே பிடிவாத குணம் உண்டு.
திமுக அதிமுக
திமுக அதிமுகவாக இருந்தாலும் தன்னை வந்து தான் சந்திக்க வேண்டும் என விரும்புவார். இதுவரை எந்த தலைவரையும் அவராக போய் சந்தித்ததில்லை. அந்த வகையில்பிற கட்சிகளே தன்னை மதிக்கும் போது தன் கட்சியைச் சேர்ந்த, அதுவும் தனது சொந்த மகன் தனித்து செயல்படுவதை ராமதாஸ் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் ராமதாஸ் இப்படி தடுமாறி வருகிறார். மேலும் அவர் வீட்டில் இருக்கும் சிலர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அன்புமணி மன்னிப்பு
வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிறகும் ராமதாஸ் நிர்வாகிகளை நீக்கம் செய்து வருகிறார் ராமதாஸ். இதற்கெல்லாம் ஒரே தீர்வு அன்புமணி, ராமதாசை நேரில் சந்தித்து பேசுவது தான். தூதர்களாக செயல்படுபவர்கள் இரு தரப்பிலும் ஒரே கருத்தை சொல்வார்களா என்பது தெரியாது. எனவே தந்தையும் மகனும் அமர்ந்து பேசினால் சமூகத் தீர்வு கிடைக்கும் 2026 தேர்தலில் மாம்பழம் பழுக்கும். இல்லையேல் கெட்டு விடும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications