மவுண்ட் ரோட்டில் சிகரெட்டுடன் நடிகர்.. இரவோடு இரவாக ’சம்பவம்’ பண்ணிட்டோம்! அன்புமணி ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மவுண்ட் ரோட்டில் நடிகர் ஒருவர் சிகரெட் பிடித்தவாறு இருக்கும் பேனர் அமைத்து இருந்தார்கள். அதை எல்லோரும் பார்த்து கடந்து சென்றுவிட்ட வேளையில், இரவோடு இரவாக அந்த பேனரில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள் என்று அச்சிடப்பட்ட எங்களுடைய பேனரை தொங்க விட்டோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் எழுதிய, பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் தலையங்கம் உரைகளின் தொகுப்புகள் நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Anbumani Ramadoss Pmk Politics

நூலை விஜடி பல்கலைக்கழக நிறுவனர் கோ.விஸ்வநாதன் வெளியிட , சிறுதுளி அமைப்பு தலைவர் வனிதா மோகன் பெற்றுக் கொண்டார். இதில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, பசுமை தாயகம் தலைவர் செளமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி," பசுமைத் தாயகம் தலைவராக இருந்த பொழுது புகையிலைப் பொருட்களை எதிர்த்து தெருவில் நின்று போராடினேன். மெரினா கடற்கரையில் 15 அடி நீளம் கொண்ட சிகரெட்டை வைத்து கத்திரிக்கோலை வைத்து வெட்டி 2002ல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். இப்படி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பற்றி மற்ற அரசியல் கட்சிகளுக்கு தெரியவே இல்லை. அன்று போராட்டம் செய்த எங்களுக்கு எதிராக வழக்குகளை போட்டார்கள்.

அன்று மவுண்ட் ரோட்டில் நடிகர் ஒருவர் சிகரெட் பிடிக்குமாறு பேனர் அமைத்து இருந்தார்கள். அதை எல்லோரும் பார்த்து கடந்து சென்றுவிட்ட வேளையில், இரவோடு இரவாக அந்த பேனரில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள் என்று அச்சிடப்பட்ட எங்களுடைய பேனரை தொங்க விட்டோம். 2004 இல் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுவரை தெருவில் நின்று போராடிய எனக்கு, கையெழுத்து போடும் பொறுப்பு வந்தது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கையெழுத்து போட்டேன். பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் கொண்டு வந்தேன். பள்ளி, கல்லூரி, வழிப்பாட்டு தலங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 அடிக்குள் புகையிலைப் பொருட்கள் விற்கக்கூடாது என தடைச் சட்டம் கொண்டு வந்தேன்.

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தது. அதனை சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியாது. புகையிலை மாஃபியா கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதனை எதிர்த்து தான் தன்னந்தனியாக இதனை செய்தேன். அன்று டெல்லியில் எனக்கு ஆதரவு இல்லை, என்னை ஆதரித்த ஒரே நபர் பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே. பிரதமரின் ஆதரவை வைத்துக் கொண்டு அனைத்தையும் செய்து முடித்தேன்.

பசுமைத் தாயகம் மூலமாக எவ்வளவு மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. புகையிலை மாபியாவை எதிர்த்ததால் கடுமையாக தொல்லைகள் கொடுத்தார்கள், குட்கா மாபியாக்கள் தொல்லைக் கொடுத்தார்கள். அதனை எல்லாம் கடந்து, இளைஞர்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு, பல கட்டுப்பாடுகளை மருத்துவர் அய்யா அவர்கள் வழிகாட்டுதலுடன் சட்டங்கள் வாயிலாக தைரியமாக கொண்டு வந்தேன். அதற்கு முக்கிய காரணம் பசுமைத் தாயகம்.

இன்று உலகம் முழுவதும் செல்லும் இடங்கள் எல்லாம் திரையரங்கம், பேருந்து, தொடர்வண்டி போன்ற பொது இடங்களில் புகைபிடிக்கும் பழக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைத்து விட்டேன், சிலர் விட்டுவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள், அதெல்லாம் கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் முதன்முதலாக அமைச்சராக நாடாளுமன்றம் சென்ற பொழுது நாடாளுமன்றத்தின் நடு அவை புகை மண்டலமாக இருந்தது. இதனை உடனடியாக அன்றைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் கொண்டு சென்றேன். அடுத்த நாளே உடனடியாக அதற்கு தடைக் கொண்டு வந்தார். இது போன்ற பல சம்பவங்களை நாங்கள் செய்திருக்கிறோம். குட்கா மாஃபியாவை மீறி குட்காவை தடை செய்தோம். ஏழு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டார்கள். நல்ல வேலை அன்று நல்ல நீதிபதி உச்சநீதிமன்றத்தில் இருந்ததனால் தடை உறுதி செய்யப்பட்டது. தேசிய மது கொள்கையை பசுமைத் தாயகம் வழியாகவே கொண்டு வந்தோம். இதுபோன்று பல செயல்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

பாலாற்றைக் காப்போம், காவிரி காப்போம், தாமிரப்பரணியைக் காப்போம், வைகையைக் காப்போம் என பல ஆறுகளை காக்கும் பிரச்சாரத்தினை செய்து இருக்கிறோம். கல்விக் கொள்கைகளிலும் பல மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பல கல்வி மாநாடு நடத்தி இருக்கிறோம். அதுபோல நான் பசுமைத்தாயகம் தலைவராக பொறுப்பேற்று முதல் போராட்டத்தினை கடலூர் சிப்காட் எதிராக நடத்தினேன். இன்று அந்த பகுதிகளில் தாய்ப்பாலில் டயாக்ஸின் என்ற கெமிக்கல் உள்ளது. அன்று இளநியில் இருந்த டயாக்சின் இன்று தாய்பால் வரை வந்துவிட்டது.

நாங்கள் வழக்கெல்லாம் போட்டு ஓரளவு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறோம். முன்பெல்லாம் கடலூர் பக்கம் சென்றாலே பயங்கரமான துர்நாற்றம் வீசும், இப்போதெல்லாம் அந்த துர்நாற்றம் இல்லை. பல ஆறுகளின் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பல முன்னெடுப்புகளை பசுமைத் தாயகம் வாயிலாக முன்னெடுத்திருக்கிறோம்.

50,000 மீனவர்களை வரவழைத்து கூடங்குளம் அணு உலை வரக்கூடாது என மருத்துவர் அய்யா அவர்கள் போராட்டத்தை நடத்தினார்கள். இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறோம் என்பதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எங்களது கட்சி பசுமை கட்சி என்பதை பெருமிதத்துடன் சொல்கிறேன். தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்களே, அதனை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு எங்களுக்கு பசுமைத் தாயகத்திற்கு தான் இருக்கிறது. காலநிலை மாற்ற கொள்கைகளை உருவாக்கி அதனை அமைச்சர்களுக்கு மேயர்களுக்கு அதிகாரிகளுக்கு கொடுத்து செயல்படுத்த வலியுறுத்தினோம். எங்களுக்கு இதற்கான பலன், அங்கீகாரம் கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ, எங்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+